தென்னிந்திய மொழி படங்கள் வெளியீடு எப்போது? - நெட்ஃப்ளிக்ஸ் விளக்கம்

By செய்திப்பிரிவு

தென்னிந்திய மொழி படங்கள் வெளியீடு தொடர்பான உருவான சர்ச்சைக்கு நெட்ஃப்ளிக்ஸ் இந்திய துணைத் தலைவர் பதிலளித்துள்ளார்

கரோனா அச்சுறுத்தலால் கடந்த 3 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் எந்தவொரு புதிய படமும் வெளியாகவில்லை. தமிழ், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே தயாராகியுள்ள படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்படுவதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள், மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், படங்கள் வெளியீட்டைத் தடுக்க முடியவில்லை.

அமேசான், ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்பட்டன. அதற்குப் போட்டியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளமும் களத்தில் இறங்கியுள்ளது. அபிஷேக் பச்சன் நடிக்கும் ‘லூடோ’, நவாசுதீன் சித்திக் நடிக்கும் ‘ராத் அகேலி ஹை’, தபு நடிக்கும் ‘எ சூட்டபிள் பாய்’ உள்ளிட்ட படங்கள், வெப் சீரியஸ் உள்ளிட்டவை நெட்ஃப்ளிக்ஸில் வெளியாவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனிடையே இந்தப் பட்டியலில் எந்தவொரு தென்னிந்திய மொழிப் படமும் இல்லை என்று சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"மாநில மொழி திரைப்படங்கள், குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படங்களுக்கு எங்கள் தளத்தில் மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்யின் 'சர்கார்', ரஜினிகாந்தின் 'பேட்ட', அல்லு அர்ஜூனின் 'அலா வைகுந்தபுரமுலோ' ஆகியவை சமீப காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. தெற்கிலிருந்து கதைகளை எடுப்பதில் கண்டிப்பாக நாங்கள் ஆர்வத்துடன் இருக்கிறோம். அதற்கான வேலைகள் ஒரு பக்கம் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த எண்ணிக்கையைக் கூட்டவும் எங்களுக்கு ஆர்வமுள்ளது"

இவ்வாறு மோனிகா ஷெர்கில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE