விஷ்ணு விஷால் பிறந்தநாள் ஸ்பெஷல்: வெகுஜன தளத்தில் வித்தியாசம் காட்டும் கலைஞன்

தமிழ் சினிமாவில் 2000-ம் ஆண்டுக்குப் பின் அறிமுகமான நாயக நடிகர்களில் அனைத்து தரப்பு ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் இன்று (ஜூலை 17) தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

கிராமமும் சிற்றூரும் நகரமும்

2009-ல் வெளியான 'வெண்ணிலா கபடி குழு' விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் முக்கியமான ஒன்று. யதார்த்தத்தையும் கிராமத்து வாழ்வியலையும் கபடி விளையாட்டுடன் கலந்து தரமான திரைப்படைப்பாக மிளிர்ந்த அந்தப் படம் இரண்டு ஆளுமைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். நாயகனாக நடித்த விஷ்ணு விஷால் இன்னொருவர். அந்தப் படத்தில் எளிமையும் அப்பாவித்தனமும் மிக்க கிராமத்து இளைஞனாக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் விஷ்ணு விஷால். அடுத்ததாக 'பலே பாண்டியா' படத்தில் நகர்ப்புற அப்பாவி இளைஞனாக நடித்திருந்தார்.

அடுத்ததாக மணி ரத்னத்திடம் பணியாற்றிய சுதா கொங்காராவின் அறிமுகப் படமான 'துரோகி' படத்தில் சென்னை குடிசைப் பகுதியில் வளர்ந்த ரவுடியாக நடித்திருந்தார். நான்காவதாக 'குள்ளநரி கூட்டம்' படத்தில் காவல்துறையில் சேர விரும்பும் மதுரைக்கார இளைஞராக நடித்திருந்தார்.

கடல்புற வாழ்வியலும் சமூகப் பகடியும்

2012-ல் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான 'நீர்ப்பறவை' படத்தில் கடல்புறத்தில் குடிகாரராக திருந்து காதலால் திருத்தப்பட்டு பொறுப்புள்ள மீனவராக மாறும் கதாபாத்திரத்தில் வெகு இயல்பாகப் பொருந்தினார். இந்தப் படம் விமர்சகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றது. விஷ்ணு விஷால் மீதான கவனத்தை அதிகரிக்க உதவியது.

2013-ல் வெளியான 'முண்டாசுப்பட்டி' 1980-களில் நடந்த சமூக அவலங்களை மூட நம்பிக்கைகளைப் பகடியாக சுட்டிய நகைச்சுவைப் படம். இந்தப் படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்திருந்தார் விஷ்ணு விஷால். படம் விமர்சகர்களின் பாராட்டை மட்டுமல்லாமல் வணிக வெற்றியையும் பெற்றது.

விளையாட்டில் சாதி விளையாட்டு

சுசீந்திரனுடன் மீண்டும் கைகோத்து 'ஜீவா' என்னும் திரைப்படத்தில் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் இளைஞராக நடித்தார். நிஜத்திலும் கிரிக்கெட் விளையாட்டில் திறமை வாய்ந்தவரான விஷ்ணு விஷால் இந்தப் படத்தில் கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சிகள் அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தன. அதோடு தமிழக கிரிக்கெட் தேர்வுக் குழுவில் நிலவும் சாதி ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பும் திரைப்படமாகவும் அமைந்திருந்த 'ஜீவா' ரசிகர்கள், விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

இதற்கு அடுத்ததாக ரவிக்குமார் இயக்குநராக அறிமுகமான 'இன்று நேற்று நாளை' என்ற அறிவியல் புனைவு படத்தில் நடித்திருந்தார் விஷ்ணு விஷால். டைம் மிஷின் என்னும் கருதுகோளை மிகச் சிறப்பாகவும் ஜனரஞ்சக ரசனைக்கு ஏற்ற வகையிலும் பயன்படுத்தியிருந்த இந்தப் படம் மிகப் பெரிய வணிக வெற்றியைப் பெற்றது. விமர்சகர்களையும் கவர்ந்தது.

இந்த வெற்றிக்குப் பிறகு 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' என்ற முழுநீள நகைச்சுவைப் படத்தில் நடித்தார். எழில் இயக்கிய இந்தப் படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தயாரிப்பாளராகவும் தடம் பதித்தார். விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளை வாரி வழங்கிய இந்தப் படம் வசூலையும் வாரிக் குவித்தது.

சுசீந்திரனுடன் விஷ்ணு விஷால் மூன்றாம் முறையாக இணைந்த 'மாவீரன் கிட்டு' 1980-களில் நிலவிய சாதிய ஒடுக்குமுறையைப் பற்றி முகத்திலறையும் ஆவணப் பதிவாக அமைந்தது. அந்த ஆதிக்க சாதியினரின் வன்முறையை அறிவால் எதிர்கொள்ள முயலும் பட்டியல் சாதி இளைஞராக நடித்திருந்தார் விஷால்.

தரத்தில் புதிய உயரம்

2018இல் 'முண்டாசுப்பட்டி' ராம் முற்றிலும் வேறுவகைக் கதைக்களத்தில் இயக்கிய 'ராட்சசன்' விஷ்ணு விஷாலின் ஆகச் சிறந்த படம் என்று கொண்டாடப்படும் அளவுக்கு எல்லாத் தரப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்தது. தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தரமான சைக்கோ-கொலைகாரனை மையமாகக் கொண்ட த்ரில்லர் படமாக 'ராட்சசன்' அமைந்திருந்தது. மிகச் சிறந்த த்ரில்லர் திரைக்கதையாக மட்டுமல்லாமல் ஒரு த்ரில்லர் படத்துக்கான உருவாக்கத்தின் தரத்திலும் உச்சம் தொட்டிருந்தது. இதில் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடித்தது ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது.

தற்போது பிரபு சாலமன் மூன்று மொழிகளில் இயக்கும் 'காடன்', 'எஃப்.ஐ.ஆர்', 'ஜகஜ்ஜால கில்லாடி', உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார் விஷ்ணு விஷால்.

உருமாறும் கலைஞன்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்களைப் பற்றிய தகவல்கள் மூலமாகவே விஷ்ணு விஷால் எப்படி குறுகிய காலத்தில் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்று அதை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். படத்துக்குப் படம் கதைக்களம். வகைமை (ஜானர்), கதாபாத்திரம். என வித்தியாசம் காண்பிப்பதோடு அவை தரமான படைப்புகளாகவும் ரசிகர்களை ஏதாவது ஒரு வகையில் திருபதிபடுத்தும் வகையிலும் இருப்பதற்கான மெனெக்கடெலும் ஒரு வெகுஜன நாயக நடிகராக விஷ்ணு விஷாலின் சிறப்புகளில் முக்கியமானது. வெகுஜன தளத்துக்குள் இயங்கிக்கொண்டே மாறுபட்ட கதையம்சங்களைத் தேர்ந்தெடுப்பது, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருவது, தரத்தில் புதிய உயரங்களைத் தொடுவது ஆகியவற்றுக்காகக் கவனமாக உழைக்கும் நடிகராக இருக்கிறார் விஷ்ணு விஷால். அதோடு எல்லா வகையான கதாபாத்திரங்களில் கதைகளிலும் பொருந்திவிடுகிறார். அந்த அளவு தன்னை படத்துக்குப் படம் உருமாற்றிக்கொள்கிறார்.

அவர் இன்னும் பல சிறந்த படங்களில் நடித்து ரசிகர்களின் நன்மதிப்பைத் தக்கவைத்து பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று விஷ்ணு விஷாலை மனதார வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE