’சப்பாணி’, ‘மயிலு’, ’பரட்டை’, பரஞ்சோதி’, ‘பாஞ்சாலி’, ’முத்துப்பேச்சி’, ‘குருவம்மா’, ‘ஒச்சாயி கிழவி’, ‘பொன்னாத்தா’,’கருத்தம்மா’, ‘என் இனிய தமிழ் மக்களே..’; - இயக்குநர் பாரதிராஜா பிறந்தநாள் இன்று

By வி. ராம்ஜி

தேவதூதர்கள் போல், சினிமா தூதர்களும் உண்டு. தங்களின் நூதனமான படைப்புகளால், கலையையும் கலாரசிகர்களையும் ஒருகோட்டில் இணைத்து, ஒருபுள்ளியில் இணைத்தவர்கள் இங்கே ஏராளம். பீம்சிங், ஏ.பி.நாகராஜன், பி.ஆர்.பந்துலு, எல்.வி.பிரசாத் என்று பல இயக்குநர்கள் சினிமாவுக்குள் வாழ்க்கையைச் சொன்னார்கள். இயக்குநர்கள் ஸ்ரீதரும் பாலசந்தரும் சினிமா எனும் தொழில்நுட்பத்தையும் வாழ்வியலையும் மன உணர்வுகளையும் வெள்ளித்திரையில் உலவவிட்டார்கள். இதையடுத்து, பேருந்து, ரயில் பயணங்களில் கடக்கும் போது பார்த்த கிராமத்தையும் வெள்ளந்தி மனிதர்களையும் வெள்ளித்திரையிலும் நகரத்து மனிதர்களுக்குள்ளேயும் கதாபாத்திரங்களாக உலவவிட்டவர்.. அவர்தான். வட்டார மொழியின் வளமையையும் மனிதர்களின் வற்றாத பேரன்பையும் கோடம்பாக்கம் பக்கம் கூட்டிவந்த அவர்... கோடம்பாக்கத்தையே தன் பக்கமும் கிராமங்களின் பக்கமும் மடை மாற்றிவிட்ட அவர்... பாரதிராஜா.

தமிழ் சினிமாவின் ஐந்தெழுத்து ஆச்சரியம். மொத்தத் திரையுலகையும் மொத்த தமிழ் உலகையும் தன் பக்கம் திருப்பி, எல்லா உதடுகளையும் ‘16 வயதினிலே’ என்றும் ‘சப்பாணி’ என்றும் ‘மயில்’ என்றும் ’பரட்டை’ என்றும் ‘குருவம்மா’ என்றும் ‘பாரதிராஜா’ என்றும் உச்சரிக்கவைத்த அதிசயம். கமல்ஹாசனை இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லையே... என்பது ஒருபக்கம் இருந்தாலும் ‘இப்படியொரு படத்தை இதுவரை பார்த்ததே இல்லையே’ என்று கொண்டாடினார்கள் தமிழ் திரையுலகத்தினர்.
கேரக்டரைஸேஷன் எனும் பாத்திர வார்ப்பு தொடங்கி, படமாக்கும் கோணம், கதையைச் சொல்லுகிற பாணி என அதுவரை பார்த்ததில் இருந்து தனித்துத் தெரிந்தார் பாரதிராஜா.

எழுபதுகளின் இறுதியில், கொஞ்சம் கொஞ்சமாக பாரதிராஜாவிடம் தங்களின் மனதை ஒப்படைத்தார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு தெருவில் கனவுகளுடன் திரிகிற ‘பரஞ்சோதிகள்’ இருப்பார்கள். அவனை நேசித்து உருகுகிற ‘பாஞ்சாலி’கள் இருப்பார்கள். ஏற்றத்தாழ்வு, சாதிப்பாகுபாடு, ஆணவ அவமானங்கள், ஊர்க்கட்டுப்பாடு, மூடநம்பிக்கை வழிபாடு என்பதையெல்லாம் ‘கிழக்கே போகும் ரயிலில்’ ஏற்றிக் கொண்டு, கோடம்பாக்கத்துக்குள் இறக்கிவிட்டார். நம் இதயத்தில் ஏற்றிவிட்டார்.

சந்திரசேகர், ஜனகராஜ், விஜயன், காந்திமதி, நிழல்கள் ரவி என இவர்களை வார்த்துக் கொடுத்தார். அவரின் அந்தக் கரகர குரல், படத்தில் சில இடங்களில், யாருக்காகவேனும் ஒலிக்கும். ’நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் சுதாகர், ராதிகா, விஜயன், ரதி என்று அவர்களின் பெயர்களையே அவர்களின் கேரக்டருக்கும் வைத்து அசத்தியதிலும் வித்தியாசம் காட்டியிருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் தொடர்ந்து ஐந்து வெற்றிப்படங்களைக் கொடுத்ததில்லை என்பதுதான் எண்பதுகளின் சரித்திரத் தகவல். அங்கே, புதிய சரித்திரம் எழுதி, தன் பெயரை அசைக்கமுடியாத இடத்தில் அழகாகச் செதுக்கினார் பாரதிராஜா. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ என ஐந்துமே வெற்றிப்படங்கள். இப்படி வெறுமனே சொல்லிவிட முடியாத வெற்றி. எல்லாமே 200 நாள், 300 நாள் என ஓடிய படங்கள்.

தன் இயக்கத்தின் மீது அசைக்கமுடியாத ஆளுமையும் திறமையும் கொண்டவர் பாரதிராஜா. அழகான கமலை ‘சப்பாணியாக’க் காட்டினார். சைக்கோ கொலைக்காரனாகவும் காட்டினார். திடீரென்று பாக்யராஜை அழைத்து, ‘நீதான்யா ஹீரோ’ என்று ‘புதிய வார்ப்புகள்’ வாத்தியார் கேரக்டரைக் கொடுத்தார். அநேகமாக, தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத ஆசிரியர் கேரக்டரும் வாத்தியார், டீச்சர்களுக்கு ஒரு உருவம் கொடுத்ததும் பாரதிராஜாவாகத்தான் இருக்கும்.

யாரோ ஒருவர் சொன்ன பொய்யால், காதலனைப் பிரிய நேரிடும். காதலியே சொன்ன பொய்யால் காதலியையே இழக்க நேரிடும் என்பதை ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தில் வைத்துக் கொண்டு இரண்டு ஜோடிகளையும் ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என உலவவிட்டார்.

மதம் தாண்டிய காதலைச் சொல்லுவார். வேலையில்லாக் கொடுமையைச் சொல்லுவார். தடக்கென்று சிட்டிக்குள் நடக்கிற கடத்தலைச் சொல்லுவார். படிக்காத ரவுடித்தனம் பண்ணுகிறவனுக்கு வாழ்க்கைப் பாடம் போதித்த ஜெனிபர் டீச்சரை நமக்கு அறிமுகப்படுத்துவார். வறட்டு கர்வத்தாலும் முரட்டுத் துணிச்சலாலும் பெண்ணை வைத்து மஞ்சுவிரட்டு சூதாடிய கிராமத்து ஆக்ரோஷத்தை மணக்க மணக்க ‘மண்வாசனை’யாகத் தருவார். மனைவி இறக்கக் காரணமானவர்களை அப்பா கொல்ல, அதை மகன் தடுத்துப் பிடிக்க என பரபரப்பூட்டுவார்.

கண்ணனின் கேமிராவோடு பாரதிராஜா மைசூர்ப்பக்கம் இறங்கினாலும் முட்டம் ஏரியாவில் இறங்கினாலும் அந்த ஏரியாவின் இயற்கையே குஷியாகிவிடும். முட்டம் பகுதியின் கடல் அலைகள் கைதட்டி வரவேற்கும். கடல், பாறை, பூக்கள், புல்வெளிகள், ஆற்றங்கரை, மலை என இயற்கையை ரசித்து ரசித்துக் காட்டுகிற பாரதிராஜாவின் படங்கள், பக்கம் பக்கமான வசனங்கள் சொல்லாததை மெளனத்திலும் கேமிராவின் நகர்விலும் கட் ஷாட்டிலுமாகச் சொல்லிவிடுவார்.

‘முதல் மரியாதை’யில் வடிவுக்கரசி வீட்டு வாசலில் கூட்டம் உட்கார்ந்திருக்கும். அடுத்த ஷாட் ராதாவின் குடிசை. அடுத்த ஷாட்டில். வடிவுக்கரசி வீட்டுத் திண்ணை காலியாக இருக்கும். அடுத்த ஷாட்... ராதாவின் குடிசை வாசலில் அந்தக் கூட்டம்.

’அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் ஆர்மோனியமும் ‘முதல் மரியாதை’ படத்தின் தீபன் கையில் உள்ள புல்லாங்குழலும் ‘காதல் ஓவியம்’ படத்தின் ராதாவுடைய கொலுசும் ‘டிக்டிக்டிக்’ படத்தில் கமல் கையிலுள்ள கேமிராவும் சம்பளம் வாங்காமல் பாரதிராஜாவுக்கு கால்ஷீட் கொடுத்தன. மனதில் அவற்றை நம்மிடையே பதியச் செய்திருப்பார்.

கார் பஞ்சராகிவிட, அப்போது நின்ற இடத்தில் எதிர்வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த பையனைப் பார்த்தார். ஹீரோவாக்கினார். அவர்தான் கார்த்திக். மீனாட்சியம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும் நிமிடம் வரை ஹீரோ கிடைக்கவில்லை. ஆனால் வெளியே வந்த நிமிடத்தில்... பாண்டியனைப் பார்த்தார். நாயகனாக்கினார். அப்படியே அள்ளிப்போட்டுக்கொண்டு தேனிப்பக்கம் சென்று படமெடுத்தார். இப்படி இந்த அல்லிநகரத்து நாயகன் எத்தனையோ வித்தைகளைச் செய்து நம் மனசையெல்லாம் அள்ளிக்கொண்டதில் விந்தையேதுமில்லை.

அண்ணன் தங்கை என்றாலே ‘பாசமலர்’தான். அதையடுத்து வேறொரு கோணத்தில், வேறொரு விஷயத்தை எடுத்துக்கொண்டு நாலாதிசையிலும் தெறிக்கவிட்ட ‘கிழக்குச் சீமையிலே’வை மறக்கவே முடியாது. பெண் சிசுக்கொலையின் வேதனைக்கண்டு அறிக்கைவிடுவார்கள். போராட்டம் நடத்துவார்கள். பாரதிராஜா விட்ட அறிக்கையும் எடுத்த போராட்டமும் அறச்சீற்றமும்தான் ‘கருத்தம்மா’.

தமிழ் சினிமாவின் ஐகான் பாரதிராஜா. அவரின் ஐகான்... ‘என் இனிய தமிழ் மக்களே’. தமிழ்த் திரையுலகில், ஒரு இயக்குநரின் அடையாளமாக ஒரு சொல்.. ஒரேயொரு சொல் இப்படி உளியெடுத்து நெஞ்சில் பதிந்ததிலும் பாரதிராஜா ஐகான் ஆகவே திகழ்கிறார்.

இங்கே, நம் சினிமாவில், அதிகமான கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர் கே.பாலசந்தர். இதற்கு அடுத்தபடியாக அதிகமான இயக்குநர்களுக்கு விசிட்டிங்கார்டாகவும் கிரீன் கேட் என்றுமாகவும் இருந்தார் பாரதிராஜா. பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, கே.ரங்கராஜ் என்று எண்பதுகளில் சினிமாவே பாரதிராஜாவிடமும் அவரின் சிஷ்யர்களிடமும்தான் இருந்தது. இதுவும் பாரதிராஜாவின் ஐகான். சிவாஜியின் நடிப்பையே வேறுவிதமாகக் கொடுத்த சாதனையும் சாதாரணமல்ல.

அதேபோல், ராதிகா, ரேவதி, வடிவுக்கரசி, ரஞ்சனி, ரேகா என்று நடிகைகளின் பட்டியலும் ரயிலளவு நீளம். விஜயகுமாரை வைத்து ‘அந்திமந்தாரை’ என்றும் நானா படேகரை வைத்து ‘பொம்மலாட்டமும்’ குஷ்புவை வைத்து ‘கேப்டன் மகளும்’ சத்யராஜை வைத்து ‘வேதம்புதிது’ம் என பாரதிராஜா கொடுத்த படங்களெல்லாம் மொத்தத் திரையுலகுக்கும் பாடங்கள்.

இளம் வயதில், அவரின் படங்கள் பற்றிச் சொல்லிக்கொண்டே வரும்போது, ‘பாரதிராஜா’வின் பெயரை நண்பர்களிடம் சொல்லும்போது, ‘பாரதிராஜா’ என்று அவரின் ஸ்டைலில், அந்த கரகர குரலில் சொல்லுவது வழக்கம். அது இன்று வரைக்கும் தொடர்கிறது. அந்த கரகரகுரலின் வசீகரம் தலைமுறைகள் கடந்தும் இன்றைக்கும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஸ்ரீதர் காலம், பாலசந்தர் காலம், பாரதிராஜா காலம் என்றிருந்தது. சகாப்தம் படைப்பதும் சரித்திரத்தில் இடம்பெறுவதும் விருதுகளைக் குவிப்பதும் என பாரதிராஜா, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர். அதனால்தான் இயக்குநர் இமயம் என கொண்டாடுகிறது தமிழ் உலகம்.

நல்ல படங்கள், மோசமான படங்கள் என்று பாரதிராஜாவிடம் இல்லை. ஓடிய படங்கள், ஓடாத படங்கள் என்றே உண்டு. அவரின் ‘காதல் ஓவியம்’ இன்றைக்கும் காவியம். ‘நிழல்கள்’ என்றைக்குமான நிஜம். அவர் உலவவிட்ட ‘நாடோடித்தென்றல்’ தென்றலில் எழுதிய கவிதை.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் 78வது பிறந்தநாள் இன்று.

‘என் இனிய தமிழ்மக்களே’ என்று நம்மை அழைக்கும் பாரதிராஜாவை, ‘எங்கள் இனிய இயக்குநரே’ என்று வாழ்த்துவோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE