திரைக்கதை, இசையில் கவனம் செலுத்தும் நித்யா மேனன்

By செய்திப்பிரிவு

இந்த ஊரடங்கு நாட்களில் இசையமைப்பு மற்றும் திரைக்கதை எழுதுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறார் நித்யா மேனன்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால், நடிகர்கள் அனைவருமே வீட்டிலிருந்தபடியே தங்களுடைய சமூக வலைதளம் மூலமாக கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்கள். இந்த ஊரடங்கினைப் பயன்படுத்தி பல்வேறு முன்னணி நடிகர்கள், புதிய விஷயங்களில் தங்களுடைய கவனத்தைச் செலுத்தினர்.

பல்வேறு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் நித்யா மேனன். இந்த ஊரடங்கில் இசையமைப்பு மற்றும் கதை எழுதும் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பாக பேட்டியொன்றில் நித்யா மேனன் தெரிவித்திருப்பதாவது:

"இந்த ஊரடங்கில் நான் இரண்டு தனிப் பாடல்களைப் பதிவு செய்திருக்கிறேன். நடிப்பைத் தாண்டி எனக்கு இசை மூலம் இன்னொரு தொழிலும் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதில் ஒரு பாடல் லண்டனில் இருக்கும் ஒரு இசைக்கலைஞருடன் இணைந்து உருவாக்கியது.

மேலும் எனக்கு எப்போதுமே ஒரு திரைக்கதை எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. ஆனால், அதற்கான சக்தி எனக்குக் கிடைப்பதில்லை. ஊரடங்கில் ஒன்று ஆரம்பித்திருக்கிறேன். ஆனால் அதை இந்த நாளுக்குள் முடிக்க வேண்டும் என்ற எந்தக் குறிக்கோளும் இல்லை. எழுத வேண்டும் என்று தோன்றினால் எழுதுவேன். இல்லையென்றால் இல்லை. முடிக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.

சில விஷயங்களைச் செய்ய நேரமே கிடைப்பதில்லை என்று புகார் சொல்வோம். ஏன் இந்த நேரத்தை அதற்காகப் பயன்படுத்தக் கூடாது. இந்தக் காலகட்டத்தின் நிச்சயமற்ற தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் எது, எப்போது, எப்படி ஆரம்பிக்கும் என்று தெரியாது.

இந்த நாளுக்குள் முடிக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. என்ன வேண்டுமோ செய்யலாம். இதுவரை எனக்கு நேரம் கிடைக்காமல் செய்ய முடியாமல் இருந்த அத்தனை விஷயங்களையும் இப்போது செய்ய முடிவெடுத்துள்ளேன். இந்தக் காலகட்டத்தை நான் சரியாகப் பயன்படுத்தி வருகிறேன்".

இவ்வாறு நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE