கெளதம் மேனன் படத்தில் வில்லனாகும் கிருஷ்ணா

By செய்திப்பிரிவு

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் 'ஜோஷ்வா' படத்தில் வில்லனாக நடித்துள்ளார் கிருஷ்ணா.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜோஷ்வா: இமை போல் காக்க'. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள்.

இதன் பெரும்பாலான பகுதிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கும். இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து 'நான் உன் ஜோஷ்வா' என்ற பாடல் வீடியோ வடிவில் இன்று (ஜூலை 16) வெளியாகியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள சூழலில், அந்தப் பாடலின் மூலம் கிருஷ்ணா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது உறுதியானது.

இதனிடையே, கிருஷ்ணா வில்லனாக நடித்திருப்பதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

" 'ஜோஷ்வா' படத்தில் வில்லன் கிருஷ்ணாவை அறிமுகப்படுத்த வேண்டிய நேரமிது. எனக்காக இதை ஒப்புக்கொண்ட உங்களுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணா. நீங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறீர்கள் சகோதரா".

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு கிருஷ்ணா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் கெளதம் மேனன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE