ரம்யா விவகாரம்: விஷால் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு

பெண் கணக்காளர் ரம்யா மீது புகார் அளித்துள்ள நிலையில், அவரைத் தம் நிறுவனத்திலிருந்து நீக்கி விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை விஷால் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள 'சக்ரா' படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது.

இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் கணக்காளர் ரம்யா மீது விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் பணம் கையாடல் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே விஷால் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

"எங்கள் 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்த ரம்யா என்பவர், நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை முறைகேடாகப் பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பது கண்டறியப்பட்டு, 30.6.2020 அன்று புகார் அளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7.7.2020 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

எனவே, ரம்யா இனி எங்கள் நிறுவனமான 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரியில்' பணியாற்றவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம். 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனத்தின் கணக்குத் தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை யாரும் தொடர்புகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் மீறி தொடர்பு வைத்துக்கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்."

இவ்வாறு விஷால் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE