பி.வாசு தனியே இயக்கிய முதல் படம்; கங்கை அமரன் இசையமைத்த 100வது படம்! 

By வி. ராம்ஜி

81ம் ஆண்டு பி.வாசுவும் சந்தான பாரதியும் இணைந்து ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தை இயக்கினார்கள். இயக்கம் - பாரதி வாசு என்ற பெயரில் இரட்டை இயக்குநர்களாக, பல படங்களை இயக்கினார்கள்.

பாரதிராஜாவின் தயாரிப்பில் ‘மெல்லப் பேசுங்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்கள், பிறகு சந்தான பாரதி என்றும் பி.வாசு என்றும் தனித்தனியே படங்களை இயக்கினார்கள். இயக்கி வருகிறார்கள்.

இதில் ராஜகாளியம்மன் எண்டர்பிரைசஸ் தயாரிப்பில், பி.வாசு தனியே வந்து முதன்முதலாக இயக்கிய படம் ‘என் தங்கச்சி படிச்சவ’. பிரபு, ரூபினி, சித்ரா, நாசர், கிட்டி, ஆனந்தராஜ் முதலானோர் நடித்திருந்தனர்.

கிராமத்துக் கதை. ஊரையே ஆட்டிப்படைக்கும் வில்லன் கிட்டி. அவரின் ஆல் இன் ஆல் அடியாள் ஆனந்தராஜ். பிரபுவின் தங்கை சித்ரா. ஆமாம்... இதயம் நல்லெண்ணெய் சித்ராதான். படத்தின் நாயகி ரூபினி.

வில்லனை சித்ரா எதிர்க்கும் நிலை வருகிறது. அப்போது வில்லனின் மகன் நயவஞ்சகத்தனமாக சித்ராவை காதலிப்பது போல் நடித்து, திருமணம் செய்வது போல் பாவ்லா செய்து பழிவாங்குகிறார். பிறகு வில்லனையும் வில்லனின் கூட்டத்தையும் கொட்டத்தையும் அழித்தொழிக்கிறார் பிரபு. இதனை கிராமிய மணம் கமழ, காமெடியும் காதலும் கலந்து, ஆக்‌ஷனும் செண்டிமெண்டும் இணைய நல்லதொரு பொழுதுபோக்குப் படமாகக் கொடுத்திருந்தார் பி.வாசு.

படத்தின் எல்லாப் பாடல்களும் நல்ல ஹிட்டடித்தன. ‘நல்லகாலம் பொறந்திருச்சு’ என்ற பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ‘சொந்த சுமையைத் தூக்கி’ என்ற பாடல் கேரக்டர்களுடன் ஒன்றிணைய உதவி செய்தது. ‘சும்மா சும்மா என்னைப் பாத்து கன்ணுல இழுக்காதே’ என்ற பாடலும் ‘பூவெல்லாம் வீதியிலே தூவுவேன்’ என்ற பாடலும் முணுமுணுக்கச் செய்தன. ‘மாமான்னு சொல்ல ஒரு ஆளு’ டூயட் உள்ளிட்ட எல்லாப் பாடல்களும் ரசிக்க வைத்தன. அத்தனை பாடல்களையும் எழுதியவர் கங்கை அமரன். இசையும் கங்கை அமரன் தான்.

‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்துக்கு மிகப்பெரிய அளவில் பல உதவிகள் செய்தார் கங்கை அமரன். இளையராஜா இசையமைக்கவும் பாலமாக இருந்தார். பிறகு பி.வாசு தனியே படம் இயக்கும்போது, முதன் முதலாக தனியே இயக்கிய படமான ‘என் தங்கச்சி படிச்சவ’ படத்துக்கு கங்கை அமரனையே இசையமைக்க வைத்தார்.
கங்கை அமரன் இசையமைத்த 100வது படம் ‘என் தங்கச்சி படிச்சவ’. 88ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி வெளியானது இந்தப் படம்.

பாடல்கள் மொத்தமும் எழுதி, கங்கை அமரன் இசையமைத்த 100வது படமான ‘என் தங்கச்சி படிச்சவ’ அந்த வருடம் ஹிட்டடித்த படங்களில் முக்கியமான படமாக அமைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE