திரைப்படம் என்பது திரையரங்குகளுக்காகவே: சுதீப் கருத்து

By செய்திப்பிரிவு

திரைப்படம் என்பது திரையரங்குகளுக்காகத் தான் என்று சுதீப் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சுதீப். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் சல்மான் கான் நடிப்பில் வெளியான 'தபங் 3' படத்தில் வில்லனாக நடித்திருந்தார் சுதீப்

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஈகா' என்ற படத்தில் வில்லனாக நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக மாறினார். ஏனென்றால் அந்தப் படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

இந்த கரோனா ஊரடங்கில் ஓடிடி தளங்கள் பிரபலமாகி வரும் சூழலில், திரையரங்கில் படம் பார்ப்பது குறித்து பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ள சுதீப். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"தனிப்பட்ட முறையில் எனக்கு பிரார்த்தனையின் மீது நம்பிக்கை உண்டு. பிரார்த்தனையை எங்கு செய்ய வேண்டுமோ அங்கு தான் செய்ய வேண்டும். உறங்கும் முன்பு, வண்டி ஓட்டும் முன்பு நாம் பிரார்த்தனை செய்வோம். ஆனால் ஒழுங்கான பிரார்த்தனை என்பது கோயிலில் தான் சரியாக இருக்கும். அப்படி திரைப்படம் என்பது எனக்குப் பிரார்த்தனையைப் போல. அது திரையரங்கில் மட்டும் தான் சரியாக நடக்கும்.

திரைப்படம் என்பது திரையரங்குகளுக்கானது. ஒரு சமூகத்துக்கானது. குடும்பத்துடன், நண்பர்களுடன் சேர்ந்து நாம் செல்லும் ஒரு இடம் அது. ஓடிடியில் ஒரு படம் வெளியாகும் போது நீங்கள் நினைத்த நேரத்தில் அதைப் பார்க்கலாம், நிறுத்தலாம். ஒரு வாரம் கழித்தும் பொறுமையாகப் பார்க்கலாம்.

ஒரு இயக்குநர் திரைப்படம் எடுப்பது, நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான். வீட்டிலிருந்து பரபரப்பாகக் கிளம்பி, வாகன நெரிசலில் வண்டியைச் செலுத்தி, டிக்கெட்டை வாங்கி, திரையரங்கில் போய் உட்கார்ந்து, விளக்குகள் அணைக்கப்பட்டு, திரையில் ஒளி வரும்போது நீங்கள் அதில் மூழ்குவீர்கள். அதுதான் சினிமா.

வேறுவழியின்றி ஓடிடி வெளியீட்டுக்குப் போகலாம். ஆனால் நான் உட்பட யாரைக் கேட்டாலும் திரைப்படம் என்பது திரையரங்குகளுக்காகத் தான் என்பார்கள்"

இவ்வாறு சுதீப் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE