'பிக் பாஸ்' சீசன் 4 தொடங்க வாய்ப்பு உள்ளதா? - விஜய் டிவி விளக்கம்

'பிக் பாஸ்' சீசன் 4 தொடங்க வாய்ப்புள்ளதா என்று உலவி வரும் கேள்விகளுக்கு விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.

சின்னத்திரை சீரியல்களுக்கு ஷூட்டிங் அனுமதிக்கப்பட்ட நிலையில், முக்கிய சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளன. நெடுந்தொடர்களைப் போல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன்-4 நடக்குமா? இல்லையா? என்பதுதான் தற்போதைய பெரும் கேள்வியாக இருந்து வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் சீசன்-4 எப்போது தொடங்கும் என சேனல் தரப்பில் விசாரித்தோம்.

‘‘சென்னையில் கரோனா பாதிப்பின் நிலை குறைந்தால் மட்டுமே பிக் பாஸ் மாதிரியான நிகழ்ச்சிகளைத் தொடர முடியும். இப்போதைய சூழலில் அதற்குச் சற்றும் வாய்ப்பில்லை. பிக் பாஸ் மாதிரியான நிகழ்ச்சிகளின் தயாரிப்பு வேலைகளில் 300க்கும் மேலான நபர்கள் பணிபுரிய வேண்டும். குறைந்தது 2 மாதங்கள் முன்கூட்டிய திட்டமிடலும் வேண்டும்.

ஆகவே, இன்றைய கரோனா சூழலில் அதற்குச் சாத்தியமே இல்லை. அரசுத் தரப்பில் அந்த அளவுக்கு நபர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்பும் குறைவு. ஆகவே சென்னையின் நிலை இயல்புக்கு வந்தால்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றிப் பேச முடியும்!’’ என்றனர்.

விஜய் சேனல் தரப்பின் பதிலைப் பார்க்கும்போது இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றே தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE