'பீட்சா' வெளியான அந்த நாள்: விஜய் சேதுபதி அனுபவப் பகிர்வு

'பீட்சா' படம் வெளியான நாளன்று நடந்த விஷயம் தொடர்பாக விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

2012-ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், கருணாகரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பீட்சா'. சி.வி.குமார் தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலமாகத்தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்குப் பிறகு வெளியான படம் தான் 'பீட்சா'. இந்தப் படம் வெளியான அன்று நடந்த விஷயம் தொடர்பாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"எனக்குத் தெரிந்த சில பேர் பார்த்துவிட்டு, இந்தப் படம் ஓடாது என்று சொல்லிவிட்டார்கள். சத்யம் திரையரங்கில் படம் பார்த்துவிட்டு, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் அலுவலகம் சென்றேன். படத்தின் ரிசல்ட்டைக் கேட்டுவிட்டு எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டு உடனே தூங்கிவிட்டேன். ஒரு மணி நேர தூக்கத்துக்குப் பிறகு நண்பர் ஒருவர் மழையில் அண்ணா மேம்பாலம் வரை என்னை ட்ராப் செய்தார்.

அப்போது 'பீட்சா' பத்திரிகையாளர் சந்திப்புக்கு வேறு வரவேண்டும். வண்டியில்லாமல் மாட்டிக் கொண்டேன். தயாரிப்பாளர் என்னைத் திட்டி மெசேஜ் எல்லாம் செய்தார். நான் சொல்வதை அவர் நம்பவில்லை. மழையிலேயே நடந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை வந்தேன். அங்கிருந்து நண்பர் ஒருவர் பிக்கப் செய்து கொண்டார்.

நான் போவதற்குள் பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்துவிட்டது. அப்படியே ஏவிஎம் திரையரங்கம் சென்றேன். 'ரிசல்ட் எப்படி அண்ணா' என்று கேட்டேன். 'மழை வேறு, போஸ்டர் வேறு இல்லை. ஆனால் படம் ஹவுஸ் ஃபுல்லாக போகுதுபா' என்று சொன்னார். அப்போதுதான் நிம்மதியடைந்தேன்.

அப்புறம் நானே திரையரங்கிற்குச் சென்று பார்க்கத் தொடங்கினேன், சந்தோஷமாக இருந்தது. மழையில் நடந்து வந்தது ஒரு பயங்கரமான அனுபவம். கண்ணீர், பயம் என அனைத்துமே இருந்தது. ஏவிம் டிக்கெட் கவுண்டர் அண்ணன் சொன்ன வார்த்தையே தேனாக இருந்தது".

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE