வேண்டுமென்றுதான் புதுப்புது கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கிறேன்: ஆயுஷ்மான் குரானா

வேண்டுமென்றேதான் இதுவரை யாரும் நடித்திராத புதிய கதாபாத்திரங்களாகத் தான் தேடி நடிப்பதாக நடிகர் ஆயுஷ்மான் குரானா கூறியுள்ளார்.

'விக்கி டோனர்' திரைப்படத்தில் உயிரணு தானம் செய்யும் நாயகனாக அறிமுகமான ஆயுஷ்மான் குரானா, 'ஷுப் மங்கள் சாவ்தான்' படத்தில் பாலியல் பிரச்சினை இருப்பவர், 'ஷுப் மங்கள் ஸ்யாதா சாவ்தான்' படத்தில் தன்பாலின ஈர்ப்பாளர், 'பாலா' திரைப்படத்தில் இள வயதில் வழுக்கை விழுந்தவர் எனத் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களிலேயே நடித்து பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள ஆயுஷ்மான் குரானா, ''இதுவரை யாரும் நடித்திராத, மேற்கோள் எதையும் தேட முடியாத கதாபாத்திரங்களாகத்தான் நான் வேண்டுமென்றே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். சமூகம் சார்ந்த படங்களின் பால் நான் ஈர்க்கப்படுகிறேன். அதன்மூலம் சமூகத்தின் மனநிலையில் ஒரு மாற்றம், குணத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன்.

நான் நடித்த கதாபாத்திரங்களின் இயல்பை இதுவரை பாலிவுட்டில் யாரும் பேசவில்லை. ஏனென்றால் அவையெல்லாம் வெளிப்படையாக வெளியே பேசப்படக் கூடாது என்று நம்பப்படுபவை. பொதுவில் இவற்றைப் பற்றி நாம் பேச அச்சப்பட்டு தவிர்த்துவிடுவோம்.

பாலிவுட்டில் சில முக்கியப் பிரச்சினைகள் பற்றி அடிக்கடி பேச வேண்டும், உரையாடல் நடக்க வேண்டும். ஆனால், அப்படி நடப்பதில்லை. வெளிப்படையாக சில விஷயங்களைப் பேசும்போது அது நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் என்று நான் என்றுமே நினைத்திருக்கிறேன். நான் தொடர்ந்து இந்தப் பயணத்தில், ஒரு நல்ல மாற்றத்துக்காகப் பயணப்படுவேன். ஒரு கலைஞனாக எனக்கு இருக்கும் மிகப்பெரிய ஊக்கம் அதுதான்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE