நடிகை சாரா அலி கான் கார் ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி

தங்களிடம் பணிபுரியும் ஓட்டுநருக்குக் கரோனா தொற்று இருப்பதாகவும், தனக்கும், தனது குடும்பத்தினர் யாருக்கும் தொற்று இல்லை என்றும் நடிகை சாரா அலி கான் கூறியுள்ளார்.

தனது தாயார் அம்ரிதா சிங் மற்றும் சகோதரர் இப்ராஹிமுடன் வசித்து வரும் சாரா, இன்ஸ்டாகிராமில் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார். ஓட்டுநருக்குக் கரோனா வந்ததைத் தொடர்ந்து, தனது குடும்பமும், வீட்டில் வேலை செய்யும் மற்றவர்களும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளதாக சாரா தெரிவித்துள்ளார்.

"எங்கள் ஓட்டுநருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பை மாநகராட்சியிடம் உடனடியாக இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டு அவர் தனிமை மையத்தில் அனுமதிக்கப்பட்டுவிட்டார். எனது குடும்பத்தினருக்கும், மற்ற ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்து பார்த்ததில் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்வோம். அத்தனை உதவி மட்டும் வழிகாட்டுதலுக்கு மும்பை மாநகராட்சிக்கு என் நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று சாரா அலி கான் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமிதாப் மற்றும் அபிஷேக் இருவரும் மருத்துவமனையிலும், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகியோர் வீட்டுத் தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவிலேயே கரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE