அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் சிகிச்சையில் நன்றாக தேறி வருகின்றனர்: மருத்துவமனை தகவல்

By பிடிஐ

கரோனா வைரஸ் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உடல்நிலை சிகிச்சையில் நன்றாகத் தேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமிதாப் 77, அபிஷேக் 44, ஜூலை 11ம் தேதியன்று ட்விட்டரில் தங்களுக்குக் கரோனா பாசிட்டிவ் ஆகியிருப்பதையும் நானாவதி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரின் உடல்நிலை நன்றாகத் தேறி வருவதாகவும், சிகிச்சைக்கு உடல் நன்றாக ஒத்துழைக்கிறது என்றும் இருவரும் குறைந்தது இன்னும் 7 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்கள் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமிதாப், அபிஷேக் தவிர ஐஸ்வர்யா ராய் பச்சன், அமிதாபின் 8 வயது பேத்தி ஆராத்யா பச்சன் ஆகியோருக்கும் கரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. இவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திங்கள் இரவு தன் மீது அன்பு செலுத்தும் ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் அமிதாப் பச்சன் தன் நன்றிகளைப் பதிவு செய்தார்.

“உங்களது பிரார்த்தனைகள், நல்லாசிகள் எனும் கனமழைப் பொழிவு, எல்லா அணைகளையும் உடைத்து விட்டது. ஏகப்பட்ட அன்பின் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளேன். என் தனிமை இருளை பிரகாசப்படுத்திய உங்களின் அன்பை என்னால் விளக்க முடியாது” என்று அமிதாப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இவர்களுக்கு கரோனா பாசிட்டிவ் ஆனதையடுத்து அவரது பங்களாவில் பணியாற்ரும் 26 பணியாளர்களுக்கும் கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அனைவருக்கும் கரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கரோனா பாதிப்பு, மரண எண்ணிக்கையில் மகாராஷ்ட்ரா இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE