எங்கே இடம்பெயர்கிறார் இளையராஜா? - முழுமையான பின்னணி!

By ஆர்.சி.ஜெயந்தன்

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக இளையராஜா தனது இசைப்பணிகளை மேற்கொண்டு வந்தார். இளையராஜாவைச் சந்திக்க வரும் பிரபலங்கள், போட்டோ எடுத்துக்கொள்ளக் கால்கடுக்கக் காத்திருக்கும் ரசிகர்கள் என பிரசாத் ஸ்டுடியோ இளையராஜா எனும் ராகதேவன் வசிக்கும் கோயிலாக மாறிப்போயிருந்தது. எல்.வி.பிரசாத்தின் மகன் ரமேஷ் பிரசாத், ஸ்டுடியோ நிர்வாகத்தை எடுத்துக்கொண்டபோது எந்தப் பிரச்சினையும் இல்லை.

'இளையராஜாவின் பாடல்கள் எங்கள் ஸ்டுடியோவில் பிறப்பதன் மூலம் அதை அவர் கோயிலாக மாற்றிவிட்டார்” என்று ரமேஷ் பிரசாத்தே பெருமையுடன் கூறியிருந்தார். ஆனால், பிலிம் சுருள் காலம் முடிந்து, திரைப்படங்கள் டிஜிட்டலாக மாறியபின் பிரசாத் ஸ்டுடியோ கடும் நஷ்டத்தைச் சந்தித்தது. நஷ்டத்தைச் சரி செய்ய பல நடவடிக்கைகளை நிர்வாகம் எடுக்கத் தொடங்கியது. அதில் ஒன்றுதான் ஸ்டுடியோவில் கிராஃபிக்ஸ், டிஜிட்டல் இண்டர்மீடியேட், டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் பணிகளை அதிக அளவில் மேற்கொள்வதன் மூலமும், தங்களது திரைப்படக் கல்லூரியை விரிவுபடுத்துவதன் மூலமும் நஷ்டத்தைச் சரி செய்யமுடியும் என்று நினைத்ததாகத் தெரிகிறது.

பூட்டப்பட்ட இசைக் கூடம்!

இப்படிப்பட்ட வேளையில்தான் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பு ஏற்றதும், பிரசாத் ஸ்டுடியோவின் நஷ்டங்களை எடுத்துக் கூறி, 'ஸ்டுடியோவைக் காலி செய்து தரும்படி' கேட்டதும் பிரச்சினை பெரிதாகிவிட்டது. 40 ஆண்டுகளாக இசைப்பணிகளை மேற்கொண்ட வந்த இடத்தை திடீரென காலி செய்ய வேண்டும் என்று கேட்டதும் இளையராஜாவும் திக்குமுக்காடித்தான் போனார். ரசிகர்கள் ராஜாவுக்காக சமூக வலைதளங்களில் ஆதரவைக் குவித்தனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டவர்கள் தலைமையில் திரையுலகினர் பலரும் இளையராஜாவுக்காக பிரசாத் ஸ்டுடியோவில் தர்ணா செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

ஆனால், கடந்த நவம்பரில் இளையராஜா 'கமல் 60' என்ற இசை நிகழ்ச்சிக்காகப் பெங்களூரு சென்றிருந்தபோது அவரது இசைக்கூடத்துக்கு பிரசாத் நிர்வாகம் பூட்டுப் போட்டதாகவும் அதன்பின்னர், மனம் நொந்துபோன இளையராஜா இதற்குமேல் பிரசாத் ஸ்டுடியோவில் இருக்க வேண்டாம் என முடிவெடுத்தார் என்பது அவரது தரப்பிலிருந்து நமக்குக் கிடைத்த தகவல்.

உருவாகிறது 'ராஜா ஸ்டுடியோஸ்'

இதன்பின்னர் இளையராஜா எங்கே தனது இசைக்கூடத்தை அமைக்கவிருக்கிறார் என்ற கேள்வி திரையுலகினருக்கும் அவரது ஆத்ம ரசிகர்களுக்கும் இருந்து வந்தது. தற்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது. சென்னையில் தியாகராய நகரையும் கோடம்பாக்கத்தையும் இணைப்பது கோடம்பாக்கம் மேம்பாலம்.

வடபழனியிலிருந்து சென்றால் இந்த மேம்பாலத்தின் வலப்புறம் ரயில் நிலையமும் இடப்புறம் முரசொலி அலுவலகம் இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் தள்ளிச் சென்றால் புகழ்பெற்ற மகாலிங்கபுரம் அய்யப்பன் கோயில், புகழ்பெற்ற லயோலா கல்லூரி, வள்ளுவர் கோட்டம் என மனம் மயக்கும் முக்கிய ஸ்தலங்கள் உள்ளன. வடபழனியி மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலத்தை அடைந்து, அதிலிருந்து கீழே இறங்கியதுமே வலப்பக்கம் புகழ்பெற்ற 'ப்ரிவியூ' திரையரங்கமாக இருந்து வருகிறது எம்.எம். தியேட்டர்.

இந்த வளாகத்தைத்தான் தற்போது இளையராஜா வாங்கியிருக்கிறார் என்ற தகவல் கிடைக்கிறது. இந்த வளாகத்தை 'ராஜா ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் முழுவதும் இசைக்கூடம், ப்ரிவியூ திரையரங்கம், டிடிஎஸ் சரவுண்ட் சவுண்ட் மிக்ஸிங் வசதி என ஒருங்கிணைந்த வளாகமாக மாற்றும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

எடிட்டர் மோகனின் அலுவலகம்!

இந்தத் திரையரங்கம் புகழ்பெறக் காரணமாக இருந்தவர் சாதனை படத்தொகுப்பாளர், எல்லோருக்கும் இனியவர் என பெயரெடுத்த 'எடிட்டர்' மோகன். இயக்குநர் எம்.ராஜா, ஜெயம் ரவி என ஆகிய இரு நட்சத்திரங்களின் தந்தை. 'எடிட்டர்' மோகனின் அலுவலகம் கடந்த 1984-ல் இருந்து இங்கே தான் செயல்பட்டு வந்தது. ஜெயம் ரவியும் இயக்குநர் மோகன் ராஜாவும் ஊடகங்களுக்கு இங்கிருந்தபடி பேட்டி அளிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். எம்.எம்.தியேட்டர் வளாகம் எடிட்டர் மோகனுக்குச் சொந்தமானது என்றுதான் திரையுலகில் அனைவரும் வைத்திருந்தனர்.

ஆனால் உண்மை அதுவல்ல; மாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான வளாகம் இது. இவரும் சில திரைப்படங்களைத் தயாரித்தும் திரைப்படங்களுக்கு பைனான்ஸும் செய்தவர். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர்தான் மாணிக்கத்தின் வேண்டுகோளை உடனே ஏற்று 36 வருடங்களாக இங்கே செயல்பட்டு வந்த எடிட்டர் மோகன் தனது அலுவலகத்தைக் காலி செய்து கொடுத்தார். தற்போது மோகனின் அலுவலகம் பத்மநாபன் தெருவுக்கு இடம்பெயர்ந்துள்ளது.

அதேபோல எடிட்டர் மோகன் எம்.எம்.தியேட்டர் வளாகத்தில் அலுவலகம் திறந்தபோது அங்கே 'தங்கம் மெடிக்கல்ஸ்' என்ற கடையும் இருந்து வந்தது. அதையும் காலி செய்து கொடுக்கும்படி இயக்குநர் மோகன் வேண்டுகோள் வைத்து நில உடைமையாளருக்கு வேண்டிய உதவிகளை எடிட்டர் மோகன் செய்திருப்பது தெரிய வருகிறது. இளையராஜாவின் இசைப்பயணத்தில் அவரது வீடு அமைந்திருக்கும் தியாகராய நகருக்கும் முக்கியப் பங்கு உண்டு. தற்போது வீட்டிற்கு மிக அருகாமையிலேயே அவருக்கு இசைக்கூடமும் கிடைத்துவிட்டது. இனி இளையராஜாவின் இசையருவிக்கு யார் பூட்டுப் போட முடியும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்