'கட்டப்பா' கதாபாத்திரத்துக்கு முதல் தேர்வு யார்? - 'பாகுபலி' கதாசிரியர் தகவல்

By செய்திப்பிரிவு

'கட்டப்பா' கதாபாத்திரத்துக்கு முதல் தேர்வு யார் என்பதை 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இதில் கதை முடியாத காரணத்தால், 2-ம் பாகத்தை 'பாகுபலி 2' என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டது படக்குழு.

கடந்த ஜூலை 10-ம் தேதி 'பாகுபலி' வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனைப் படக்குழுவினர், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 5 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, 'பாகுபலி' படத்தின் கதாசிரியரும், ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் பேட்டி அளித்துள்ளார்.

அதில் 'பாகுபலி' கதை பிரபாஸுக்காகவே எழுதப்பட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும், அதற்கான கதாபாத்திரங்கள் தேர்வு, காட்சிகள் எப்படியெல்லாம் உருவானது என்பது குறித்துப் பேசியிருக்கிறார் விஜயேந்திர பிரசாத்.

"அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எழுதினோமோ அவர்களே நடித்தார்கள். 'கட்டப்பா' கதாபாத்திரத்துக்கு மட்டும் முதலில் சஞ்சய் தத் தான் எங்களுடைய தேர்வாக இருந்தது. ஆனால், அவர் ஜெயிலில் இருந்ததால்தான் சத்யராஜைத் தேர்வு செய்து நடிக்க வைத்தோம்" என்று தெரிவித்துள்ளார் விஜயேந்திர பிரசாத்.

பாகுபலி கதாபாத்திரத்துக்குப் பிறகு பலரும் பாராட்டப்பட்ட கதாபாத்திரம் என்றால் அது 'கட்டப்பா' தான். அதற்கு சஞ்சய் தத் தான் முதல் தேர்வாக இருந்திருக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது. சத்யராஜ் நடித்த அந்தக் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறவே, தற்போது தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல முன்னணிப் படங்களில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE