சீரியல் ஒளிபரப்பு: விஜய் டிவி - ஜீ தமிழ் அதிரடி முடிவு

சீரியல் ஒளிபரப்பு தொடர்பாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் இரண்டுமே அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர்.

கரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. கடந்த மாதம் சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தாலும், பல்வேறு முன்னணி நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

ஏனென்றால் ஊரடங்கு பிரச்சினை, மாவட்டம் விட்டு மாவட்டம் வந்தால் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட சில சிக்கல்களை எதிர்கொண்டது சீரியல் குழு. இந்தப் பிரச்சினைகள் தொடர்ச்சியாக இருக்கும் என்ற காரணத்தால் சன் டிவியில் 4 சீரியல்கள் ஒளிபரப்பையே ரத்து செய்துவிட்டார்கள்.

'அழகு', 'கல்யாணப் பரிசு', 'தமிழ்ச்செல்வி', 'சாக்லேட்' என ஒரே நிறுவனம் தயாரித்த சீரியல்கள் ஒளிபரப்பை நிறுத்துவிட்டது சன் தொலைக்காட்சி. மேலும், விஜய் டிவி மற்றும் ஜீ தொலைக்காட்சி ஆகிய சேனல் தரப்பில் இந்தப் பிரச்சினைத் தொடர்பாக பேசினோம்.

அப்போது அவர் கூறியதாவது:

"ஒளிபரப்பாகி வந்த எந்த சீரியல்களும் நிறுத்தும் முடிவு இதுவரை எடுக்கவில்லை. நடிகை, நடிகர்களைக்கொண்டு நிறையை அத்தியாயங்கள் எடுத்து வைத்தபிறகு சரியான திட்டமிடலுடன் புதிய சீரியல்களையும், சீரியல் தொடர்ச்சிகளையும் ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளோம். அதற்கு எவ்வளவு காலங்கள் ஆனாலும் பழைய சீரியல்களை ஒளிபரப்புவோம். இனிமேல் இது போன்ற சிக்கல்கள் வந்தால் சமாளிக்க இது வழிவகுக்கும். ஆகையால் 25-க்கும் மேற்பட்ட அத்தியாயங்கள் கையில் வைத்துக் கொண்டு தான் புதிய சீரியல்கள், சீரியல் தொடர்ச்சிகள் தொடங்கப்படும்"

இவ்வாறு இரண்டு சேனல் தரப்பும் தெரிவித்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE