’’பாலசந்தர் சாரின் மன உளைச்சலுக்கு மருந்தாக இருந்தார் ரஜினிகாந்த்’’ - கலைப்புலி எஸ்.தாணு நெகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

ஜூலை 9, இயக்குநர் சிகரம் பாலசந்தரை ஈன்றெடுத்ததால், இந்தநாள் உயரிய நாள்.தமிழ்த் திரையுலகமே போற்றக்கூடிய, இந்தியத் திரையுலகமே ஆராதிக்கக் கூடிய, உலகமே வணங்கத்தக்க மிக அற்புதமான இயக்குநர் அவர். புனிதர்.

பாலசந்தர் சார் காலத்தில் நாங்கள் வாழ்ந்தது, அவருடன் பழகியது இதெல்லாம் காலத்தாலும் மறக்கமுடியாத காலப்பெட்டகம். பதிவு செய்துவிட்டுச் சென்ற ஒவ்வொரு படங்களும் வருங்காலத் தலைமுறைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. நல்லதொரு காப்பியம். நல்லதொரு சான்று.

அப்படிப்பட்ட மனிதருடன், நான் அதிக அளவில் பழகியிருக்கிறேன். மனதில் உள்ளதை சொல்லக்கூடியவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி எனக்கு. நான் அவருடன் பேசினாலும் சென்று பார்த்தாலும் அவர் மிகவும் சந்தோஷப்படுவார். ’யோவ், நீ வந்துட்டுப் போனாலே ஒரு வைப்ரேஷன் இருக்குதுய்யா’ என்று சொல்லுவார்.

அவருடைய மனக்குறையைச் சொல்லி கேட்கக்கூடிய நான் அருமருந்தென இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கொரு மகிழ்ச்சி. அவருடைய மனக்கவலையை மாற்றக்கூடிய மருந்தாக விளங்கியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். அவருடைய மனக்கவலையின் போதெல்லாம், அவருடைய கடைசிக் காலத்தில் அவருடைய மன உளைச்சலுக்கு உற்றதொரு தூணாக இருந்து, ரஜினி சார் என்னென்ன செய்தார் என்பதெல்லாம் மறக்கவே முடியாத விஷயங்கள்.

பாலசந்தர் சாரின் கனவுகள் எல்லாம் சாதாரணமானவை அல்ல. இந்த திரையுலகை சமநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என ஆசைப்பட்டார். சொல்லும் செயலும் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்று நினைத்தவர். அப்படியே வாழ்ந்தவர். அவருடைய சொல் புதிது. சுவை புதிது. அவருடைய பொருளும் புதிது. உயர்ந்த மாமனிதர். பாலசந்தர் சார் அழைத்துச் சென்ற பாதையில், நாம் சரியாகப் பின்பற்றிப் பயணிப்பதுதான் நாம் அவருக்குச் செய்கிற வணக்கமாக இருக்கும்.

இவ்வாறு கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE