சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு. நடிகர் நடிகைகளுக்காகப் பார்ப்போம். படத்தின் பிரமாண்டத்துக்காகவும் பார்ப்போம். காமெடிக்காகப் பார்ப்போம். வசனங்களுக்காகப் பார்ப்போம். பாடல்களுக்காகப் பார்ப்போம். இப்படி எல்லா வகையான விஷயங்களும் அமைந்த படங்களில்... ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் முக்கியமான இடத்தில் இருக்கிறது.
‘நாடோடி மன்னன்’, ‘மன்னாதி மன்னன்’, ’அடிமைப் பெண்’, ‘எங்கவீட்டுபிள்ளை’ ,‘அன்பே வா’, ‘படகோட்டி’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மாதிரியான மிகப் பிரமாண்டமான படம் என்று முத்திரை பெற்ற படங்களில் ஒன்று ‘ஆயிரத்தில் ஒருவன்’ அட்டகாசமான இடத்தைப் பிடித்திருக்கிறது.
படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் பி.ஆர்.பந்துலு. 1937ம் ஆண்டில் திரைத்துறைக்கு வந்தவர். நடிகராகத்தான் வந்தார். ’ராஜபக்தி’ தான் முதல் படம். அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். 52ம் ஆண்டு, ‘பணம்’ படத்தில் சிவாஜியுடன் நடித்தார். அடுத்து, 54ம் ஆண்டில் ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ படத்தில் நடித்தார்.
57ம் ஆண்டு, சிவாஜியை வைத்து ‘தங்கமலை ரகசியம்’ படத்தை முதன் முதலாக இயக்கினார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 58ம் ஆண்டு சிவாஜியை வைத்தே ‘சபாஷ் மீனா’ இயக்கினார். அடுத்த வருடம், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தை இயக்கினார். மிகப்பிரமாண்டமான வெற்றியையும் புகழையும் தந்தது.
60ம் ஆண்டு, ‘குழந்தைகள் கண்ட குடியரசு’ படத்தை இயக்கினார். இதில் சிவாஜியும் நடித்திருந்தார். 61ம் ஆண்டு ‘கப்பலோட்டிய தமிழன்’, 62ம் ஆண்டு ’பலே பாண்டியா’, 64ம் ஆண்டு ’கர்ணன்’, ‘முரடன் முத்து’ படங்களை இயக்கினார்.
இப்படி, தொடர்ந்து சிவாஜியை வைத்து படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர், 65ம் ஆண்டு முதன் முதலாக எம்ஜிஆரை வைத்து தயாரித்து இயக்கியதுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில், எம்ஜிஆரை பிரமாண்டமான படமாக தயாரித்து இயக்கினார்.
பந்துலு படத்தில் நடிக்க எல்லோருமே ஆசைப்பட்டார்கள். எம்ஜிஆரும் விரும்பினார். அதனால்தான், பந்துலு வந்து கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். ‘ஒரு ரூபாய் அட்வான்ஸ் கொடுங்க போதும். அப்புறம் பாத்துக்கலாம்’ என்று கேட்டதுமே சம்மதித்தார் எம்ஜிஆர்.
படத்தின் மிகப்பெரிய முதல் பலம்... ஆர்.கே.சண்முகம். கதை, வசனகர்த்தா. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வசனங்கள் மிகக் கூர்மையாகவும் புத்திச்சாலித்தனமாகவும் அமைந்தன. எம்ஜிஆர்தான் நாயகன் என்பதை மனதில் கொண்டு, வசனங்கள் எழுதப்பட்டன. மருத்துவராக இருந்துகொண்டு, மக்களின் அவலங்களையும் அரசியல் சூழ்ச்சிகளையும் பேசிய வசனங்கள் எல்லாமே, எம்ஜிஆரின் திரை வாழ்விலும் அரசியல் வாழ்விலும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல, பெரிதும் உதவின.
எம்ஜிஆர், நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ் என ஒவ்வொருவரின் நடிப்பும் உன்னதம். நாகேஷ் ஜோடியாக வரும் மாதவி, காமெடி நடிகை என்பதைத் தாண்டியும் மிக அழகாக இருப்பார். ‘அதேகண்கள்’ உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தவர், ஏனோ மிகப்பெரிய அளவுக்கு வரவில்லை.
தீவு, படகு, கப்பல், கடல், செட் என பிரமாண்டம் கூட்டிக்கொண்டே போகும் எல்லாமே! பாடல்களும் படமாக்கப்பட்ட விதமும் அழகு ஜாலம் காட்டும். எம்ஜிஆர் பேரழகனாகத் திகழ்வார். கண்ணதாசனும் வாலியும் பாட்டெழுதியிருப்பார்கள்.பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
படத்தின் நாயகி பூங்கொடியாக ஜெயலலிதா நடித்தார். 65ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியானது. இதே 65ம் ஆண்டில்தான் ஜெயலலிதாவை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஸ்ரீதர். ‘வெண்ணிற ஆடை’ தான் ஜெயலலிதாவின் முதல் படம். ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா முதலானோருக்கு இதுவே முதல் படம். ’ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதாவுக்கு இரண்டாவது படம். எம்ஜிஆருடன் இணைந்து முதன்முதலாக நடித்தார் ஜெயலலிதா.
பி.ஆர்.பந்துலுவுக்கும் 65ம் ஆண்டு, முக்கியமான ஆண்டாக அமைந்தது. அதுவரை சிவாஜியுடன் தொடர்ந்து இணைந்து படங்கள் பண்ணிக்கொண்டிருந்தவர், 65ம் ஆண்டில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை முதன் முதலாக எம்ஜிஆரை வைத்து இயக்கினார்.
66ம் ஆண்டு, எம்ஜிஆரை வைத்து ‘நாடோடி’ இயக்கினார். 68ம் ஆண்டு ‘ரகசிய போலீஸ் 115’ இயக்கினார். 70ம் ஆண்டு ‘தேடி வந்த மாப்பிள்ளை’ படத்தை இயக்கினார். எம்ஜிஆரின் கடைசிப் படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் போது பந்துலு காலமானார். படத்தின் டைட்டிலில் பந்துவுலுக்கு அஞ்சலி என்று போடப்பட்டது.
எம்ஜிஆருடன் பந்துலு இணைந்து தொடர்ந்து பணியாற்றியதற்கு அச்சாரம் போட்டதுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அதேபோல்தான் ஜெயலலிதாவையும் சொல்லவேண்டும்.
65ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி வெளியானது ‘வெண்ணிற ஆடை’. அநேகமாக, இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே எம்ஜிஆர், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு ஜெயலலிதாவை தேர்வு செய்துவிட்டதாகத்தான் இருக்கவேண்டும். ‘வெண்ணிற ஆடை’ வெளியாகி, அடுத்த மூன்றே மாதத்தில் வெளியானது ‘ஆயிரத்தில் ஒருவன்’.
ஜெயலலிதா இணைந்தார். பந்துலு இணைந்தார். ஆனால், இந்தப் படம்தான் மெல்லிசை மன்னர்கள் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். இதையடுத்து இருவரும் தனித்தனியே இசையமைத்தார்கள்.
எம்ஜிஆருடன் ஜெயலலிதா ஜோடி சேர்ந்த இந்தப் படம்தான், ஜெயலலிதாவின் திரை வாழ்விலும் அரசியல் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்களையும் ஏற்றங்களையும் தந்தன. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த வருடங்களில் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நிறைய படங்களில் நடித்தார்கள்.
65ம் ஆண்டு, ஜூலை மாதம் 9ம் தேதி வெளியானது ‘ஆயிரத்தில் ஒருவன்’. கிட்டத்தட்ட, 55 வருடங்களாகிவிட்டன.
இன்றைக்கும் புத்தம்புது காப்பியாக ஜொலிக்கிறான் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago