இரட்டைவேடப் படங்கள் எத்தனையோ வந்துவிட்டன. பிரிந்துவிட்ட அண்ணன் தம்பிக் கதைகளும் ஏகத்துக்கும் வந்துவிட்டன. ஆவிக்கதைகளும் நம் தமிழ் சினிமாவில் பஞ்சமில்லை. இரட்டைவேட அண்ணன் தம்பியில் ஒருவர் ஆவியாக வருவதும் இன்னொரு நாயகனுக்கு உடந்தையாக இருப்பதும் என அப்போதே எடுக்கப்பட்டதுதான் ‘கல்யாண ராமன்’.
மிகப்பெரிய எஸ்டேட்டின் முதலாளி வி.எஸ்.ராகவனும் அவரின் இன்னொரு மனைவி புஷ்பலதாவும் பிரிந்து வாழ்வார்கள். இங்கே அப்பாவிடம் ஒரு கமல். அங்கே புஷ்பலதாவிடம் ஒரு கமல். எஸ்டேட் மேனேஜர் மேஜர் சுந்தர்ராஜனுக்கு, வி.எஸ்.ராகவனின் சொத்து மீது ஒரு கண். தப்புக்கணக்கு எழுதிக் கொண்டிருப்பவர் மீது ராகவனுக்கு நம்பிக்கையே இல்லை.
அந்த வீட்டின் சமையல்காரர் சாமிபுள்ள வி.கே.ராமசாமி. அப்பாவிடம் வளரும் கமலின் பெயர் கல்யாணம். அம்மாவிடம் வளரும் கமலின் பெயர் ராமன். கல்யாணம் கொஞ்சம் அப்பாவி. சிறுபிள்ளையாக இருப்பவர். சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளில் ஈடுபடுபவர். கல்யாணத்தின் மிகப்பெரிய சந்தோஷம்... செண்பகம். இந்தக் கேரக்டரில் ஸ்ரீதேவி. குப்பு எனும் சிறுவன். இவர்களுடன் விளையாடுவதுதான் கல்யாணத்தின் பொழுதுபோக்கு. ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொள்ள விரும்புவார் கல்யாணம்.
» அஜித் படத்தின் வெற்றிக்கு விஜய் வைத்த விருந்து
» கரோனாவால் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி: ‘1917’ இயக்குநரின் வேண்டுகோளை ஏற்ற நெட்ஃப்ளிக்ஸ்
மேனேஜர் மேஜரின் திட்டங்களுக்கு சமையற்கார வி.கே.ராமசாமியும் உடந்தையாக இருப்பார். கல்யாணம், இவர் சொன்னால்தான் கேட்பார். காதலுக்கு இவரிடம்தான் ஐடியா கேட்பார். மேஜரின் ஊழல்கள் வி.எஸ்.ராகவனுக்குத் தெரிந்துவிட்ட நிலையில், அவரைக் கொன்றுவிடுவார் மேஜர்.
முன்னதாக, தன் மகன் கல்யாணத்திடம் சென்னையில் அம்மாவும் அண்ணனும் இருக்கும் விவரத்தைச் சொல்கிறார். இந்த விஷயம் மேஜருக்குத் தெரியவர... நாடகத்தில் நடிக்கும் தேங்காய் சீனிவாசனையும் மனோரமாவையும் அம்மா, மகன் என செட்டப் செய்கிறார். ஒருகட்டத்தில், கல்யாணத்தை மலை உச்சியில் இருந்து தள்ளிக் கொன்றுவிடுகிறது மேஜர் டீம். இதைப் பார்த்த ஸ்ரீதேவி அதிர்ச்சியில் மனநலம் பாதிக்கப்பட்டுவிடுகிறார். அந்த குப்பு பையனின் நாக்கை அறுத்துவிடுகிறார்கள்.
இப்போது, கல்யாணம் இறந்து ஆவியாக சென்னைக்குச் சென்று அண்ணன் கமலை சந்திக்கிறார். விஷயத்தையெல்லாம் சொல்லுகிறார். ராமன் கமல், எஸ்டேட்டுக்குச் செல்ல, அங்கே உள்ள தேங்காய் சீனிவாசனை தம்பி என்றும் மனோரமாவை சின்னம்மா என்றும் சொல்கிறார்கள். அண்ணன் கமல், அங்கே நடப்பவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக அறிந்து கொள்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவியை குணப்படுத்துகிறார். குப்புவுக்கு எழுதச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
இந்தநிலையில், மகனைத் தேடி புஷ்பலதா வர, மொத்த பேரையும் கட்டிப்போடுகிறார்கள் மேஜர் குழுவினர். அவர்களை காப்பாற்றுவதும் அப்பாவையும் தம்பியையும் கொன்றவர்களை போலீசிடம் ஒப்படைப்பதும் என முடிகிறது படம்.
டபுள் ஆக்ஷனில் பேய், ஆவிப் படம், கமல் படத்தில் ஆவிப்படம் என்று வந்தது இதுவாகத்தான் இருக்கும். அதேபோல், இரண்டு கமலுக்கும் வித்தியாசம் காட்டும் விதமாக, ஒரு கமலுக்கு தெற்றுப்பல் என்கிற விஷயமும் புதுசுதான்.
கமல், ஸ்ரீதேவி வெற்றி ஜோடி என திரையுலகம் கணித்து உறுதிப்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. ‘கமல், ஸ்ரீதேவி நடித்தாலே படம் ஹிட்டாகிவிடும்’ என்றார்கள் திரையுலகினர். வியாபார ரீதியாகவும் இந்த ஜோடி பேசப்பட்டது.
மிகச் சிறிய கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, தொய்வில்லாமல் கதையும் திரைக்கதையும் பண்ணியிருந்தார் பஞ்சு அருணாசலம். பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் அவர் தயாரித்த படம் இது.
கமலும் ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்குத்தான் பஞ்சு அருணாசலத்துக்கு கால்ஷீட் கொடுக்கப்பட்டது. அந்த சமயத்தில், கமலும் ரஜினியும் தனித்தனியே படம் பண்ணுவோம் என பேசி முடிவெடுத்தார்கள். ‘நாங்கள் கொடுத்த கால்ஷீட்டில் தனித்தனியே படம் பண்ணுங்கள்’ என்று பஞ்சுவிடம் சொன்னார்கள். ‘ஒரே சமயத்தில் இரண்டு படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கவேண்டுமே’ என்று பஞ்சு அருணாசலம் யோசித்தார். ‘ரஜினி படத்தை எஸ்.பி.எம் பண்ணட்டும். என்னுடைய படத்தை அவரின் உதவி இயக்குநரான ஜி.என்.ரங்கராஜனிடம் கொடுங்கள். அவர் இயக்கட்டும்’ என்று கமல் சொல்ல, இந்த ஐடியா பிடித்துப் போகவே, உடனே இரண்டு கதைகள் பண்ணினார். இரண்டு படங்கள் தயாரித்தார். கமலுக்கு ‘கல்யாணராமன்’, ரஜினிக்கு ’ஆறிலிருந்து அறுபது வரை’ கொடுத்தார். இரண்டு படங்களுமே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்படியாகத்தான் ‘கல்யாணராமன்’ நமக்குக் கிடைத்தார்கள்.
இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. ‘காதல் வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன்’ என்று எஸ்.பி.பி. கல்யாணத்துக்காகப் பாடினார். ‘காதல் தீபமொன்று நெஞ்சிலே ஏற்றிவைத்தேன்’ என்று ராமன் கமலுக்கு, மலேசியா வாசுதேவனும் பாடினார்கள். ‘மலர்களில் ஆடும் இளமை புதுமையோ’ பாடலும் ‘நினைத்தால் இனிக்கும்’ பாடலும் ஜானகியும் ஷைலஜாவும் பாடியிருந்தார்கள். ஆக, எல்லாப் பாடல்களுமே ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
படத்தின் காமெடி கலந்த வசனங்கள், பெரிதாகப் பேசப்பட்டன. பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார். பாடல்களையும் அவர்தான் எழுதியிருந்தார். இரண்டு கமலுக்கும் காட்டிய வித்தியாசம், தெற்றுப்பல் மேட்டர் மிகவும் ரசிக்கப்பட்டது. படம் முழுக்கவே ஸ்ரீதேவி, ரொம்பவே அழகாகத் தெரிந்தார். லொகேஷனும் கொள்ளை அழகு.
ஜி.என்.ரங்கராஜன், எஸ்.பி.முத்துராமனிடம் ஏராளமான படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘கல்யாணராமன்’ முதல் படம். இதன் பின்னர், ‘கடல் மீன்கள்’, ‘ராணித்தேனி’, ‘எல்லாம் இன்பமயம் என பல கமல் படங்களை இயக்கினார் இவர். பிறகு பல வருடங்கள் கழித்து, இவருக்காக, இவரின் இயக்கத்தில் ‘மகராசன்’ படத்தில், சம்பளமே வாங்காமல் கமல் நடித்துக் கொடுத்தார் என்பார்கள்.
கமலுக்கு ‘சி’ செண்டர் வரை சென்று வசூலை வாரிக்குவித்த படங்களில் இந்தப் படமும் முக்கிய இடம்பிடிக்கிறது. இந்தப் படம் வந்த காலகட்டத்தில், கல்யாணம், திருவிழா மாதிரியான விழாக்களில், ’கல்யாண ராமன்’ படத்தின் ஒலிச்சித்திரம் ரிக்கார்டுகளில் ஓடும்.சுற்றி உட்கார்ந்து கொண்டு குழாய் ஸ்பீக்கர் வழியே வழியும் கதையைக் கேட்டு ரசித்தார்கள் மக்கள்.
இன்றைக்கு பார்ட் ஒன், பார்ட் டூ என்பதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. தமிழ் சினிமாவில், பார்ட் டூ என ஆரம்பித்து வைத்ததும் ‘கல்யாணராமன்’ திரைப்படம்தான். இந்தப் படம் வெளியாகி ஐந்தாறு வருடங்களுக்குப் பிறகு பஞ்சு அருணாசலம் தயாரிப்பில், கமல், ராதா, சத்யராஜ், கவுண்டமணி நடிப்பில் ‘ஜப்பானில் கல்யாணராமன்’ வெளியானது. இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ஆனாலும் ‘கல்யாணராமன்’ பட்டிதொட்டியெங்கும் சென்று ஹிட்டடித்தது போல, ஜப்பானுக்குச் சென்ற கல்யாணராமன் ஏனோ பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.
1979ம் ஆண்டு, ஜூலை மாதம் 6ம் தேதி வெளியானது ‘கல்யாண ராமன்’. படம் வெளியாகி, 41 வருடங்களாகிவிட்டன. இன்னும் எத்தனை வருடங்களானாலும் ‘கல்யாணராமனையும்’ ‘ஆஹா வந்துருச்சு’வையும் மறக்கவே மாட்டார்கள் ரசிகர்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago