கிசுகிசு செய்திகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துபவை: வேதிகா காட்டம்

By செய்திப்பிரிவு

கிசுகிசு செய்திகள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துபவை என்று நடிகை வேதிகா குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் அர்ஜுன் நடித்த 'மதராஸி' படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. பின்பு 'முனி', 'காளை', 'பரதேசி', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இம்ரான் ஹாஸ்மி நடித்த 'தி பாடி' என்ற படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் வேதிகா. தற்போது கிசுகிசு செய்திகள் எழுதுபவர்களைச் சாடியுள்ளார் வேதிகா.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

"சிலர் ஏன் அப்படியான செய்திகளை எழுதுகின்றனர் என்று தெரியவில்லை. ஏனென்றால் அவை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துபவை. இப்படி எழுதுபவர்களைப் பற்றி வேறு யாராவது கிசுகிசு எழுதினால் இவர்கள் தாங்கிக் கொள்வார்களா?

எங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. நாங்கள் ஏதாவது மன அழுத்தத்தில் இருக்கலாம், உறவுப் பிரச்சினையில் இருக்கலாம், தொழிலில் மோசமான கட்டத்தில் இருக்கலாம். ஆனால், அதெல்லாம் பொழுதுபோக்குக்காக, கவன ஈர்ப்புக்காக செய்தியாக மாறினால், ஒருவரின் சோகத்தையும், வலியையும் வைத்து வருவாய் சம்பாதித்தால், அது மிகவும் முறையற்ற செயல் என்று நான் நினைக்கிறேன்.

அப்படியான ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன் உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்களால் நிம்மதியாகத் தூங்க முடிய வேண்டும். ஏனென்றால் அப்படி எழுதப்படும் விஷயங்கள் சரிசெய்ய முடியாத பாதிப்பை ஒருவருக்கு ஏற்படுத்தலாம். நடிகர் மட்டுமல்ல, எவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அப்படி செய்திகள், கிசுகிசுக்கள் வரக்கூடாது".

இவ்வாறு வேதிகா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE