அம்மாவின் மரணம்; வேலையில் சிக்கல்: மீட்டெடுத்த வித்யா பாலனின் கருணை

By செய்திப்பிரிவு

நடிகை வித்யா பாலன் பல்வேறு சிக்கல்களிலிருந்து தன்னை எப்படி மீட்டார் என்றும், அவரது மிகப்பெரிய உதவி குறித்தும் இதுவரை வெளிவராத தகவல் ஒன்றை பாலிவுட் முன்னாள் பத்திரிகையாளர் பகிர்ந்துள்ளார்.

சவும்யாதிப்தா பேனர்ஜி கடந்த 15 வருடங்களாக பத்திரிகைத் துறையில் அனுபவம் பெற்றவர். பத்திரிகையாளராக இருந்தபின் பல்வேறு ஊடக நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது வலைப்பூவுக்கென இணையத்தில் பெரிய வாசகர் பட்டாளமும் உள்ளது. பாலிவுட் துறை குறித்து தொடர்ந்து தனது அனுபவங்களை அதிரடியாகப் பகிர்ந்து வரும் பேனர்ஜி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குப் பின் பாலிவுட்டை விமர்சித்து வரும் பிரபல பதிவர்களில் ஒருவர்.

இவர் சமீபத்தில் நடிகை வித்யா பாலன் குறித்து பகிர்ந்த ஒரு சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அவரது நீண்ட வலைப்பதிவின் தமிழாக்கம் பின்வருமாறு:

''பாலிவுட்டில், செல்வாக்கான பின்புலத்துடன் துறைக்குள் வரும் நடிகர்கள், திமிர் பிடித்தவர்களாக, அவர்களுக்குத் தேவையில்லாதவர்களை அற்பமாக நடத்துபவர்களாக இருக்கிறார்கள்.

இதுதான் அவர்களை, வெளியில் இருந்து (பாலிவுட் பின்புலம் இல்லாமல்) வருபவர்களிடமிருந்து தனித்துக் காட்டும்.

ஒரு பாலிவுட் நடிகையைப் பற்றிய எனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்கிறேன்.

மே 2012-ல், மும்பையின் ஊடக நிறுவனம் ஒன்றில், தலைமைப் பதவியில் வேலைக்குச் சேர்ந்தேன். கொல்கத்தாவில் ஒரு புதிய வங்காள மொழி நாளிதழை ஆரம்பிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள அணியுடன் சேர்ந்து நான் பணியாற்ற வேண்டும் என்பதே எனது பொறுப்பு. பல விஷயங்கள் இதைச் சார்ந்து இருந்தன. எனவே வேலையில் அழுத்தம் அதிகமாக இருந்தது.

அந்த நேரத்தில் என் அம்மா புற்றுநோயின் கடைசிக் கட்டத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.

கொல்கத்தாவுக்கும் மும்பைக்கும் இடையே அலைந்து திரிந்து அதே நேரத்தில் என் அம்மாவின் சிகிச்சைக்காகவும் அலைவது, அதிக போட்டி, கட்டுப்பாடுகள் இருக்கும் சந்தையில் நாளிதழைத் தொடங்குவது என எனக்குச் சிக்கல் அதிகமாக இருந்தது.

துர்கை பூஜைக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்ததால், அந்த நாளுக்கான விசேஷப் பிரதியை வெளியிடலாம் என்று முடிவு செய்து பாலிவுட்டில் இருக்கும் கச்சிதமான வங்காள முகத்தை வைத்து வெளியிடலாம் என்று நினைத்தோம். வங்காள நடிகைகளை ஒதுக்கிவிட்டு அனைவருமே தமிழ் நடிகையான வித்யா பாலனின் பெயரையே உத்தேசித்தனர்.

நாங்கள் துர்கை பூஜை பதிப்புக்கான வேலைகளில் இருக்கும்போது என் அம்மா காலமானார். நான் உடனடியாக கொல்கத்தாவுக்குச் சென்றேன்.

எனது உலகம் நொறுங்கிப் போனது.

எனது பணியில் எனக்கு அர்த்தம் கிடைக்கவில்லை. நான் உயிர் வாழ்வதிலேயே எனக்கு அர்த்தமில்லையென்று தோன்றியது. என் உலகமே இருண்டு போனது.

அடுத்த சில நாட்கள் கண்ணைக் கட்டியது. எனது அணித் தலைவர்கள், அலுவல் வேலை குறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும், அலுவலகத்திலிருந்து யாரும் என்னை அழைக்க மாட்டார்கள் என்றும் ஆறுதல் கூறினர்.

அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தாலும், கொடுத்த பணியை முடிக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை உறுத்தியது.

இரண்டு நாட்கள் கழித்து எனது மொபைலில் ஒரு செய்தி வந்தது. வித்யா பாலன் அனுப்பிய செய்தி. எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

நான் அவரிடம் எதையும் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

நாளிதழுக்கான போட்டோ ஷூட் குறித்தும் என்று அதை முடிக்க வேண்டும் என்பது குறித்தும் கேட்டார்.

எல்லா வேலைகளையும் முடிக்க ஏழு நாட்கள் மட்டுமே உள்ளன என்று நான் அவரிடம் சொன்னேன். மேலும் ஒரு போட்டோ ஷூட்டை முடிக்க இது மிகக் குறுகிய காலம். நான் வேறு மும்பையில் இல்லை என்பதால் அதுகுறித்துக் கவலை வேண்டாம் என்று நான் சொன்னேன்.

அடுத்தடுத்து சரியான தகவல் தொடர்பு இல்லாததற்கு மன்னிப்பு கேட்டேன். வித்யாவால் ஏன் இந்த போட்டோ ஷூட்டை முடித்துத் தர முடியாது என்பது எனக்குப் புரிகிறது என்றும் சொன்னேன்.

அதற்கு ஒரு ஸ்மைலியை மட்டுமே வித்யா பதிலாக அனுப்பினார்.

அடுத்த நாள் வித்யாவின் மேலாளர் அழைத்தார். அடுத்து அவரது மக்கள் தொடர்புக் குழுவினர் அழைத்தனர். என்ன நடக்கிறது என்பது எனக்குப் புரிவதற்குள், வித்யா பாலன் போட்டோ ஷூட்டை முடிப்பார் என்றனர். எனக்கு மின்னஞ்சல் வந்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் அவர் அணியினர் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாக, ஆணித்தரமாகக் கூறினார்கள்.

வித்யா இதற்காக எந்த விதமான சம்பளத்தையும் பெற்றுக்கொள்ள மாட்டார்.

இப்படியான விசேஷமான போட்டோ ஷூட்டுக்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பது எங்களில் பலருக்குத் தெரியும்.

அதனால், நான் மும்பையில் இல்லை, என்னால் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாது என்று வித்யாவுக்கு மீண்டும் செய்தி அனுப்பினேன். ஏனென்றால் அவர் எப்படியான ஒரு பணியை ஒப்புக்கொள்ளவிருக்கிறார் என்பது அவருக்குத் தெரிய வேண்டும் என்று நினைத்தேன்.

அதற்கும் ஒரு ஸ்மைலியை மட்டுமே பதிலாக அனுப்பினார்.

இந்த உரையாடல் அடுத்தடுத்து நடக்கவில்லை.

அவர் படப்பிடிப்பின் இடைவெளியில் எனக்குப் பதில் அனுப்பினார். நான் பல மணி நேரங்கள் கழித்து எனது மொபைலைப் பார்க்கும்போது அதற்குப் பதில் போடுவேன். ஆனால், இதனால் எந்தச் சிக்கலும் நேரவில்லை.

நான் இல்லாமலேயே அந்த போட்டோ ஷூட்டை நடத்த அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வித்யா பாலனின் மேலாளர் என்னிடம் சொன்னார்.

அது எப்படிச் சாத்தியமாகும்? என்ன படம்பிடிக்க வேண்டும், என்ன கரு என்பது அவர்களுக்குத் தெரியும்?

வித்யா எல்லாவற்றையும் அவரே ஏற்பாடு செய்வார் என்றும், அவரது தனிப்பட்ட ஊழியர்களே இதற்கும் பணியாற்றுவார்கள் என்றும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. கொல்கத்தாவிலிருந்து ஒரு புடவையை அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதையும்தானே ஏற்பாடு செய்து கொள்வதாக வித்யா பாலன் சொன்னார்.

பிறகு வித்யா பாலனின் க்ரியேட்டிவிட்டி அணி, இந்த போட்டோ ஷூட்டின் கரு என்ன என்று கேட்டது. என் மனதில் என்ன இருக்கிறது என்பதை போட்டோஷாப்பில் எடிட் செய்து அனுப்பச் சொன்னார்கள். அதை அப்படியே வித்யா செய்து கொடுப்பார் என்றார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தை அவருக்கு அனுப்பினேன்.

இவற்றுக்கு நடுவில் என் நிலைமை சற்று சீரானது. என் மனதில் இருந்த இருள் நீங்கியது. என் அம்மாவின் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் என் இதயம் கனத்தது. ஆனால் வித்யாவின் உதவியால் நான் சற்று தேற ஆரம்பித்தேன்.

இரண்டு நாட்கள் கழித்து, காலை 11 மணிக்கு, வித்யாவின் அணி என்னை அழைத்தது. வித்யா ஸ்டுடியோவில் இருப்பதாகவும், போட்டோ ஷூட்டுக்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். நான் வாயடைத்துப் போனேன்.

வித்யாவே எல்லா ஏற்பாடுகளையும் செய்தார் என்றார்கள். உணவு எங்கிருந்து வருகிறது என்று கேட்டேன். வித்யாவின் வீட்டிலிருந்து என்றார்கள்.

அடுத்த மூன்று மணி நேரங்கள் வரை, போட்டோ ஷூட்டில் முதல் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற நேரத்திலிருந்து ஒவ்வொரு விஷயமும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

மாலை முடியும் நேரத்தில் போட்டோ ஷூட் முடிந்துவிட்டது என்றும், புகைப்படங்கள் நன்றாக வந்துள்ளன என்றும் வித்யா எனக்கு செய்தி அனுப்பினார்.

அடுத்த நாள் எனக்கு சில மாதிரி புகைப்படங்கள் வந்தன. கீழே பாருங்கள்.

நாங்கள் நினைத்த கருவை எப்படி அதே போல வித்யா கொண்டு வந்திருக்கிறார் என்பதைப் பாருங்கள். இந்தப் புகைப்படத்தை எடுத்ததற்கு தன் பெயர் போட வேண்டாம் என புகைப்படக் கலைஞர் கூறிவிட்டார்.

ஒரு முன்னணி பாலிவுட் நடிகை, ஒரு போட்டோ ஷூட்டை முடித்துத் தர இவ்வளவு தூரம் மெனக்கெடுவார் என்பதே என்னால் நம்ப முடியவில்லை. தனது திரைப்படப் படப்பிடிப்பை ரத்து செய்து, வேலையை முடிக்க ஏழு நாட்கள் இருந்தும், ஐந்து நாட்களுக்குள் இந்தப் புகைப்படங்களை வித்யா ஏன் எனக்கு அனுப்ப வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.

அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. தாங்க் யூ என்று மட்டும் அவருக்கு ஒரு செய்தி அனுப்பினேன்.

"உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று அவர் பதில் அனுப்பினார்.

அவரது கடைசி செய்தியைப் பார்த்து நான் கண்கலங்க ஆரம்பித்தேன். நான் அப்போதுதான் முதல் முறையாக அழுதேன்.

அந்தக் கண்ணீர், அந்தச் சூழலிலிருந்து மீள எனக்கு உதவியது.

இருண்ட, மன அழுத்தம் தந்த ஒரு கட்டத்திலிருந்து வித்யா பாலன் என்னைத் தனியாளாக மீட்டெடுத்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன்.

வாரிசு நடிகர் நடிகைகள், செல்வாக்குடைய பின்னணியில் இருப்பவர்களை வைத்து போட்டோ ஷூட் எடுப்பது என்பது படு சிக்கலான வேலை. நமக்குப் பித்துப் பிடிக்க வைப்பார்கள். இழிவாக நடத்துவார்கள். அதிகாரம் செலுத்துவார்கள்.

ஆனால், நடுத்த வர்க்கத்திலிருந்து நடிகர்களாக வருபவர்கள் அப்படி அல்ல. பெரும்பாலும் இவர்கள் பச்சாதாபம் கொண்டவர்களாக, மற்றவர்களுக்கு உதவும் சின்ன சின்ன கனிவான செயலைச் செய்யத் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.

வித்யா பாலன் எனக்குச் செய்த உதவியைப் போல வேறெந்த பாலிவுட்டின் நடிகரும் எனக்குச் செய்ததில்லை.

வித்யாவின் கருணை இல்லாமல் என்னால் இந்தத் துறையில் அந்தக் கட்டத்தில் நீடித்திருந்திருக்க முடியாது. ஓய்வு பெற்று மும்பையிலிருந்து சென்றுவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் வித்யா பாலனின் அந்தக் கனிவான செயல் என் வாழ்க்கையை மாற்றியது.

அந்த போட்டோ ஷூட்டோடு அவரது கனிவு முடியவில்லை.

பெரும்பாலான நடிகர்கள், ஊடகங்களில் என்ன புகைப்படம் வர வேண்டும் என்பதைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் வித்யா அந்தப் படப்பிடிப்பின் அனைத்துப் புகைப்படங்களையும் அனுப்பி வைத்தார். வெறுமனே எடுத்த புகைப்படங்களையும் அனுப்பி வைத்தார். அதில் ஒன்று தான் இது.

பல வருடங்கள் கழித்து, வித்யா பாலன் அளவுக்குக் கருணை கொண்ட ஒரு பாலிவுட் நடிகரைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.

மக்களுக்கு உதவ எந்த தூரமும் செல்வார், நண்பர்களின் தேவைகளுக்குத் தருவார், கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு யோசிக்காமல் பணம் தருவார்.

அவர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

மோசமானவர்கள் நிறைந்த நச்சான இடமே பாலிவுட். வித்யா பாலன் சந்தித்த துரோகம், அற்ப அரசியல், நிராகரிப்பு குறித்து நீங்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

அந்தக் கொடூரமான சம்பவங்களை நானும் கேட்டிருக்கிறேன்.

ஆனால் அதையெல்லாம் தாண்டி அவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளார்.

பொறுமையாகக் கேட்டதற்கு நன்றி''.

இவ்வாறு சவும்யாதிப்தா பேனர்ஜி வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்