படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனாவா? - ராம் கோபால் வர்மா மறுப்பு

By செய்திப்பிரிவு

தனது படப்பிடிப்பு தளத்தில் பணிபுரிந்தவருக்கு கரோனா என்று வெளியான செய்திக்கு ராம் கோபால் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறாமல் நடிகர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். தங்களுடைய சமூக வலைதளத்தில் கரோனா தொடர்பான விழிப்புணர்வை மட்டும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த கரோனா ஊரடங்கில் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி, தனது இணைய திரையரங்கில் வெளியிட்டு வருபவர் ராம் கோபால் வர்மா. 'க்ளைமேக்ஸ்' மற்றும் 'நேக்கட்' என இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார். இரண்டுமே நல்ல வசூல் கிடைத்ததால், தொடர்ச்சியாக தனது இணைய திரையரங்கிற்கு பல்வேறு கதைகளை படமாக்கி வருகிறார்.

இதனிடையே, ராம் கோபால் வர்மாவின் படப்பிடிப்பு தளத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பரவலாக தெலுங்கு மீடியாவில் செய்திகளாகவும் வெளியாகின. இதனை ராம் கோபால் வர்மா மறுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ராம் கோபால் வர்மா கூறியிருப்பதாவது:

"எங்கள் குழுவில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் படப்பிடிப்பை நாங்கள் நிறுதிவிட்டதாக வரும் செய்திகளை உண்மையில்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே அனைவரையும் நாங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். யாருக்கும் கரோனா தொற்று இல்லை. நாங்கள் கண்டிப்புடன் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம்."

இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE