'சுப்பிரமணியபுரம்' வெளியாகி 12 ஆண்டுகள்: மதுரை மண்ணிலிருந்து ஒரு மாணிக்கம்

By எஸ்.கோபாலகிருஷ்ணன்

எல்லா ஆண்டுகளிலும் வெளியாகும் நூற்றுக்கணக்கான படங்களில் பத்துப் படங்களாவது 'நல்ல படம்' என்று பெரும்பான்மை ரசிகர்களால் அடையாளப்படுத்தப்படும். ஆனால் ஒரு சில படங்கள் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான படம் என்ற அந்தஸ்தைப் பெறும். அப்படிப்பட்ட படங்கள் மிக அரிதாகவே வெளியாகும். பத்தாண்டுகளுக்கு ஒரு முறை, இருபதாண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு தலைமுறைக்கு ஒரு முறை என்று அப்படிப்பட்ட முக்கியத்துவமான படங்கள் வணிக வெற்றியையும் விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டையும் தாண்டி .ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும், அதன் போக்கிலும் ரசிகர்களின் ரசனையிலும் கூட பெரிய மாற்றத்தை விளைவிக்கும்.

ஆங்கிலத்தில் ட்ரெண்ட் செட்டர் என்று அழைக்கப்படும் இந்த வகையான படங்கள் நூறு ஆண்டு வரலாறு கொண்ட தமிழ் சினிமாவிலும் நிறைய உள்ளன. 2008-ல் இதே நாளில் (ஜூலை 4) வெளியான 'சுப்பிரமணியபுரம்' அப்படியான ஒரு. ட்ரெண்ட்செட்டர் படம்.

வாழ்வியல் ஆவணம்

21-ம் நூற்றாண்டில் தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த படங்களைக் கொடுத்த இயக்குநர்கள் பாலா, அமீர் ஆகியோரிடம் சினிமா பயின்ற சசிகுமார் இயக்குநராக. தயாரிப்பாளராக, நடிகராக அறிமுகமான படம் 'சுப்பிரமணியபுரம்'. 1980-களில் மதுரையில் வேலைவெட்டி இல்லாமல் திரியும் சில இளைஞர்களையும் உள்ளூர் அளவில் அரசியல் அதிகாரம், மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பத்தையும் இவர்களுக்கிடையிலான உறவையும் துரோகத்தையும் முன்வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் அதுவரை தமிழ் சினிமாவில் வந்த மதுரை மண் சார்ந்த கதைகளையும் பீரியட் படங்களையும் பல கட்டப் பாய்ச்சலில் கடந்து சென்றது.

1980-களின் மதுரை மண்ணின் வாழ்க்கையை அச்சு அசலாகச் சித்தரித்த வாழ்வியல் ஆவணமாக அமைந்த அதே வேளையில் ரசிகர்களை ஒரு நொடிகூட கவனம் சிதறவிடாமல், நட்பு, கிண்டல், கேளிக்கை. அன்பு. பாசம், காதல், நட்பு, கூடா நட்பு, துரோகம், வீரம் என அனைத்தையும் கலந்து முழுமையாக ரசிக்கத்தக்க ஜனரஞ்சகப் படமாகவும் விளங்கியதுதான் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் சாதனை. அதுவே அதன் வெற்றிக்கும் வரலாற்றில் அழிக்க முடியா இடம்பிடித்தமைக்கும் காரணம்.

வியக்கவைக்கும் மெனக்கெடல்

கடந்த காலத்தில் நடந்த கதைகளையோ, காட்சிகளையோ சொல்வதற்கு எளிதாக கறுப்பு வெள்ளை நிறத்தைப் பயன்படுத்திவந்தது தமிழ் சினிமா. ஆனால், அந்தக் காலகட்டத்தின் சூழல், பேருந்துகள், சாலைகள், வீடுகள் போன்ற சூழல் சார்ந்த அம்சங்கள், உடை. உணவு. கலை, திரைப்படங்கள் போன்ற பண்பாட்டு அம்சங்கள் என 1980களின் மதுரையை அச்சு அசலாகக் கண்முன் நிறுத்தியது 'சுப்பிரமணியபுரம்'. அதற்கான மெனக்கெடல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. படத்தில் நாயகனும் நாயகியும் அவர்கள் நண்பர்களுடன் 'முரட்டுக்காளை' திரைப்படம் பார்க்கச் செல்வதைப் போல் ஒரு காட்சி இருக்கும்.

அந்தக் காட்சிக்கு ரசிகர் மன்றம் சார்பில் திரையரங்க வாயிலில் நடிகர் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைத்திருப்பார்கள். கட் அவுட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பெயர் இருக்கும் அல்லவா? அவற்றுக்கு அந்தக் காலகட்டத்தில் மதுரையிலிருந்த ரஜினி ரசிகர் மன்றங்களின் நிர்வாகிகளின் பெயரைத் தெரிந்துகொண்டு கட் அவுட்களில் இடம்பெறச் செய்தார் சசிகுமார்.

திரைப்படத்தின் இறுதி வடிவத்தில் வருமா வராதா வந்தாலும் ரசிகர்களால் கவனிக்கப்படுமா கவனிக்கப்படாமல் போகுமா என்று தெரியாத இதுபோன்ற தகவல்களின் உண்மைத்தன்மைக்கே சசிகுமார் இவ்வளவு உழைத்திருக்கிறார் என்பதை வைத்துப் பார்த்தால் இந்தப் படத்துக்கு அவர் ஒட்டுமொத்தமாக எவ்வளவு உழைத்திருப்பார் என்பதை நினைத்து வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

அதிகார ஆட்டத்தின் பலியாடுகள்

இப்படி உண்மைக்கு நெருக்கமான வாழ்வியல் சித்தரிப்பு மட்டுமல்ல 'சுப்பிரமணியபுரம்' படத்தின் சிறப்பு. அரசியல் அதிகாரத்துக்காக ஒரு குடும்பமே எப்படி எல்லாம் ஏங்குகிறது, அதை எப்படியாவது அடைந்துவிடத் துடிக்கிறது, அதற்கு தன்னைச் சுற்றி இருப்பவர்களைத் தன்னை நம்பியவர்களைக் கைவிடவும் தேவைப்பட்டால் அழித்தொழித்துவிடவும் தயாராக இருக்கிறது என்பதைத் திரையில் பிரச்சார நெடி இல்லாமல் பதைபதைக்கும் காட்சிகள் மூலமாகப் பார்வையாளர்களை உலுக்கும் வகையில் காண்பித்த படம் 'சுப்பிரமணியபுரம்'.

இந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளில் தோன்றி ஒன்றிரண்டு வசனங்களை மட்டுமே பேசிச் சொல்லும் கதாநாயகி சுவாதியின் அம்மா கதாபாத்திரம் குடும்பங்களில் பெண்களுக்குள்ளும் ஊறிக் கிடக்கும் மறைமுக அதிகார வேட்கையை வெளிப்படுத்தியது. அரசுப் பணியில் மதிக்கத்தக்க நிலையில் வெளித் தோற்றத்துக்கு அமைதியானவராகத் தெரியும் பெரியப்பா கதாபாத்திரம் 'குல கவுரவம்' மீதான பற்று ஒருவரைக் கொலை செய்ய வைக்கவும் தயங்காது என்பதைத் தோலுரித்தது. வெளித் தோற்றத்துக்கு நகைச்சுவைக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றும் ஊர்ப் பெரியவர் கதாபாத்திரம் உண்மையில் வெளியில் கவுரவமான மரியாதைக்குரியவர்களாக அதிகாரம் செய்துகொண்டிருப்பவர்கள் உண்மையில் எவ்வளவு இழிவானவர்களாக இருக்க முடியும் என்பதைக் காண்பித்தது.

கேளிக்கைக்குக் குறையில்லை

இப்படிப் பல வகைகளில் நுட்பமான சித்தரிப்புகளைக் கொண்ட 'சுப்பிரமணியபுரம்' இதையெல்லாம் உணர முடியாத அல்லது ஒரு படத்தை இப்படி எல்லாம் ஆய்வுக்குட்படுத்த விரும்பாத பொழுதுபோக்கை நாடும் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத விருந்தாக அமைந்தது. 80-களின் காதல் காட்சிகள் 2000-களின் காதல் காட்சிகளைவிடப் புதுமையாகவும் ரசிக்கும்படியும் இருந்தன. நகைச்சுவைக் காட்சிகளில் தெறித்த மதுரைக் குசும்பும் வெட்டி வீராப்பும் ரசிகர்களைக் கைதட்டி ஆர்ப்பரிக்க வைத்தன.

பெரும்பாலும் புதுமுகங்கள் அல்லது சினிமாவுக்கு அதிக பரிச்சயமில்லாத அசலான நபர்களைப் போன்ற நடிகர்களே நடித்திருந்தது படத்தின் உண்மைத்தன்மைக்கு வலுவூட்டியது என்பதோடு கதாபாத்திரங்களோடு ரசிகர்கள் இயல்பாக ஒன்றிப் போகும் வகையில் அந்த அனைவரிடமிருந்தும் சிறப்பான நடிப்பு வாங்கப்பட்டிருந்தது. ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சாகாவரம் பெற்றவை. 'கண்கள் இரண்டால்' பாடல் அந்த ஆண்டின் தேசிய கீதமானது. மற்ற பாடல்களும் ரசிக்க வைத்தன. பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம். படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என அனைத்துத் தொழில்நுட்ப அம்சங்களும் வெகு சிறப்பாக அமைந்தன.

அழுத்தமான தடம் பதித்தவர்கள்

இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான சசிகுமார் இன்று முன்னணிக் கதாநாயக நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார். நடிகர் ஜெய், சுவாதி ஆகியோருக்கும் ஒரு நல்ல திருப்புமுனையை இந்தப் படம் ஏற்படுத்தியது. இயக்குநர் சமுத்திரக்கனி இந்தப் படத்தில் துரோகம் செய்யும் வில்லனாக அறிமுகமாகி அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இன்று அவர் தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற நடிகராக இருக்கிறார். தேசிய விருதையும் பெற்றுவிட்டார். ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்துக்குப் பிறகு பல படங்களில் சிறப்பான பாடல்களை வழங்கினார்.

தேசிய அளவில் பரவிய புகழ்

'பாட்ஷா'வின் பிரம்மாண்ட வெற்றி எப்படி தமிழில் மேலும் பல நிழலுலகப் படங்களுக்கு வித்திட்டதோ அதேபோல் 'சுப்பிரமணியபுரம்' படத்துக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும் தமிழில் மதுரையை அங்கு இளைஞர்கள் பலருக்கு இருக்கும் வீரம் சார்ந்த பெருமிதங்களால் நிலவும் வன்முறைச் சூழலையும் மையமாகக் கொண்ட பல திரைப்படங்கள் வெளியாகின. இவற்றில் சில படங்கள் மட்டுமே ஓரளவாவது பொருட்படுத்தத்தக்க முயற்சிகளாக இருந்தன. மற்ற படங்கள் மதுரை என்றாலே வன்முறையும் துரோகமும்தான் என்ற தவறான பொதுமைப்படுத்தப்பட்ட பார்வைக்கு வலுசேர்த்தன. மதுரை மண்ணைக் கதைக் களமாகக் கொண்டு இன்னும் எவ்வளவு படங்கள் வந்தாலும் 'சுப்பிரமணியபுரம்' படத்தின் இடத்தைப் பெற்றுவிட முடியாது.

இந்தப் படம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தேசிய அளவில் நன்மதிப்பைப் பெற்ற படைப்பாளிகளாலும் கொண்டாடப்படும் படைப்பு. 'சுப்பிரமணியபுரம்' படத்தால் ஈர்க்கப்பட்டதால்தான் புகழ்பெற்ற 'கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர்' படத்தை இயக்கியதாக அனுராக் காஷ்யப் கூறியது இதற்கு ஒரு சோறு பதம்.

பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் 'சுப்பிரமணியபுரம்' இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அதே இடத்தில் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE