கடைசி மூச்சுவரை தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்: சிம்ரன் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

கடைசி மூச்சுவரை தமிழுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று சிம்ரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் சில படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி படங்கள் தயாரிப்புக்கு கதைகளும் கேட்டு வருகிறார்.

இதனிடையே, ஒரே சமயத்தில் 2 படங்களில் 'அறிமுகம்' என்ற பெயர் சிம்ரனுக்கு வந்தது. ஒன்று 'விஐபி', இன்னொன்று 'ஒன்ஸ்மோர்'. இரண்டுமே ஜூலை 4-ம் தேதி வெளியான படங்கள். இதன் மூலம் திரையுலகிற்கு நாயகியாக சிம்ரன் அறிமுகமாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகின்றன.

இது தொடர்பாக சிம்ரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"23 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரும் ஆளுமையான சிவாஜி சாருடன் பணியாற்றிய நினைவுகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. ஒரு கனவு நிஜமானது. அவரது ஆசியும், அவரிடமிருந்து கற்றுக் கொண்டவையுமே என்னை உருவாக்கியது என்று நம்புகிறேன்.

நண்பன் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் தமிழில் நடிக்கத் தொடங்கியது அதிர்ஷ்டம். என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன்".

இவ்வாறு சிம்ரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE