பி.கண்ணன் நினைவேந்தல்: கண்ணீர் மல்க நினைவுகளைப் பகிர்ந்த பாரதிராஜா

பி.கண்ணன் குறித்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், கண்ணீர் மல்க நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் பாரதிராஜா

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா இயக்கிய படங்களில் 'நிழல்கள்' தொடங்கி 'பொம்மலாட்டம்' வரை ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் கண்ணன். 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார். அதில் சுமார் 40 படங்கள் பாரதிராஜாவின் படங்கள்தான். அவர் உடல்நலக் குறைவால் ஜூன் 13-ம் தேதி பிற்பகல் காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலகின் முன்னணி இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் என அனைவருமே இரங்கல் தெரிவித்தனர்.

இதனிடையே, ஒளிப்பதிவாளர் பி.கண்ணனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஒன்று இணையம் வழியே நடைபெற்றது. ஜூம் செயலி வழியே நடைபெற்ற இந்த நிகழ்வில் பி.சி.ஸ்ரீராம், ஆர்.டி.ராஜசேகர், திரு என முன்னணி ஒளிப்பதிவாளர்களுடன் இயக்குநர் பாரதிராஜாவும் கலந்து கொண்டார். அதில் பி.கண்ணன் குறித்து கண்ணீர் மல்க தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் பாரதிராஜா. அதில் அவர் பேசியதாவது:

"அனைவருமே 2-3 படங்களுக்கு ஒரு முறை ஒளிப்பதிவாளர்களை மாற்றுவார்கள். ஏனென்றால், ஒளிப்பதிவாளரிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், 40 ஆண்டுகளாக ஒரே ஒளிப்பதிவாளரோடு பணிபுரிந்தேன். ஏனென்றால் அவனுடைய ஒழுக்கம் தான் காரணம். தெரிந்து செய்தேனா, தெரியாமல் செய்தேனா என்று தெரியவில்லை. பீரியட் படம், கிராமத்து படம் என என்ன பண்ணினாலும் லைட்டிங் அதற்கு மாதிரி பண்ணுவான். 'அலைகள் ஓய்வதில்லை' படத்துக்கு 3 நாட்கள் தொடர்ச்சியாக வேலை செய்தோம். சளைக்கவே மாட்டான். முகம் சுளிக்கவே மாட்டான்.

கண்ணன் மறைவின் போது தேனியில் இருந்தேன். கரோனா அச்சுறுத்தலால் என்னை சென்னைக்கு விடமாட்டேன் என்றார்கள். பின்பு கலெக்டரிடம் சண்டைப் போட்டு வந்தேன். என் பொண்டாட்டி பிள்ளைகளை விட அதிகமான காலங்கள் கண்ணன் கூட இருந்திருக்கிறேன். 'படப்பிடிப்புக்கு இடங்கள் தேர்வு செய்ய வா' என்றால் கூட வரமாட்டான். 'நான் ஏன் சார்,. நீங்கள் எங்கே ஷாட் வைக்க வேண்டும் என்கிறீர்களோ வைக்கப் போகிறேன். நான் எதுக்கு சார்' என்று சொல்வான். அந்தளவுக்கு என் மீது நம்பிக்கை உள்ளவன்.

இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு வித்தியாசமாக அவனை போட்டோ எடுத்து அனுப்பினான். 'அடடா நல்லாயிருக்கே. இதை வைத்து ஒரு கேரக்டரே பண்ணலாமே' என்று யோசித்துக் கொண்டிருந்தேன். வேறு ஏதாவது ஒளிப்பதிவாளருடன் வேலை செய்யலாமா என்று எண்ணம் வரும். இவனை எப்படி தூக்கி போட்டுவிட்டுப் போவது என்று விட்டுவிடுவேன். என் குடும்பத்தினருக்கே அவனை அவ்வளவு பிடிக்கும். என் அப்பா, அம்மா இறந்த போது தான் இவ்வளவு உடைந்து போனேன். அப்புறம் இவனுடைய இறப்புக்குத் தான்"

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE