கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் கட்சிப் பணிகளில் வேகம்: கமல் முடிவு; காணொலி மூலம் நிர்வாகிகளிடம் உரையாடல்

By செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் கட்சிப் பணிகள் வேகம் எடுக்கும் என்று நிர்வாகிகளிடம் கமல் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய காலத்திலிருந்து தொடர்ச்சியாக தமிழக அரசின் முடிவுகள், திட்டங்கள் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்து வருகிறார் கமல்ஹாசன். மேலும், பிரதமர் மோடிக்குக் கமல் எழுதிய கடிதமும் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக உரையாடி வருகிறார் கமல்.

இந்தச் சமயத்தில் தான் தங்கியிருக்கும் ஓட்டலிலிருந்து கட்சி அலுவலகத்தில் பணிபுரியும் நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக உற்சாகமாகக் கலந்துரையாடியுள்ளார். அனைவருடைய நலன், குடும்பத்தினரின் நலன் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டவர், தீய பழக்கங்கள் இருந்தால் உடனடியாக விட்டுவிடவும் வலியுறுத்தியுள்ளார்.

அப்போது மக்கள் நீதி மய்யம் நிர்வாகியான முரளி அப்பாஸிடம் என்ன தாடி, முடி எல்லாம் அதிகமாகிவிட்டது. நான் வேண்டுமானால் வந்து வெட்டிவிடவா என்று கிண்டலாகக் கேட்டுள்ளார். அப்போது தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு சலூன் கடையில் பணிபுரிந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.

கட்சி ரீதியாக இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அனைவரிடமும் கமல் உரையாடியதால் பலரும் உற்சாகமாகியுள்ளனர். அப்போது ஊரடங்கு முடிந்தவுடன் கட்சிப் பணிகள் வேகமெடுக்கும் எனவும், அதிகமாக வேலை இருப்பதால் பத்திரமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் கமல்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக முரளி அப்பாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ""என்ன முரளி அப்பாஸ் உங்களுக்கு என்னைவிட தாடி நரைச்சிருக்கு". நம்மவர் இன்று ஜூம் மீட்டிங்கில் கேட்டார் இப்படி. தலைவர், எந்த சிறப்புக் காரணமுமின்றி, அலுவலகத்தில் பணிபுரிபவர்களோடு பேசவேண்டி மட்டுமே இக்கூட்டம் நடைபெற்றது. அனைவரிடமும், மாஸ்க் முக்கியம், உடற்பயிற்சி கொஞ்சம் வேண்டும்.

உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள் சத்யமூர்த்தி. வேலை நிறைய இருக்கு என்று அவர் கூறியது ஒரு தந்தை அறிவுரை சொன்னதுபோல் இருந்தது. முடிவில் தலைவர், இது ஒரு குடும்ப மீட்டிங் என்று சொன்னபோதுதான், தந்தையைப்போல் என்று நான் உணர்ந்தது சரிதான் என்று மகிழ்ந்தேன். எப்படியோ, இந்த உற்சாகத்திலேயே நம்ம டீம் நின்னு விளையாடும்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE