’சட்டம்’, ‘நீதி’, ‘சாட்சி’யைக் களமாக்கிய இயக்குநர்!  - எஸ்.ஏ.சந்திரசேகர் பிறந்தநாள் இன்று 

ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு பாணி இருக்கும். அந்த ஸ்டைலில் படமெடுப்பார்கள். பீம்சிங் காலம் தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் வந்த இயக்குநர்கள் வரை எத்தனையோ விதமாகப் படமெடுத்திருக்கிறார்கள். குடும்பத்தை மையமாக வைத்தும், மிருகங்களை மையமாக வைத்தும், சஸ்பென்ஸ் திரில்லர் என்று மாடர்ன் தியேட்டர்ஸும் என படங்கள் வந்திருக்கின்றன. அந்த வகையில், சட்டப் பிரச்சினைகளை நுணுக்கி நுணுக்கி, சட்டத்தின் ஓட்டைகளைக் காட்டிய படங்களாக எடுத்தவர் என்கிற தன் பாணியை, தனி பாணியாக்கி அதில் வெற்றியும் பெற்றவர்... எஸ்.ஏ.சந்திரசேகர்.

தமிழ்த் திரையுலகில், ‘இந்த டைரக்டர் படம்பா... பாத்தே ஆகணும்’ என்று ஒரு சில இயக்குநர்களின் படங்களை ஆர்வத்துடன் பார்ப்பார்கள். எத்தனையோ இயக்குநர்களின் படங்களை, ஹீரோயிஸத்தையும் கடந்து, பார்த்து ரசித்தது போல், எஸ்.ஏ.சந்திரசேகர் படங்களையும் அப்படித்தான் பார்த்தார்கள்.
சிவாஜியின் ‘வசந்தமாளிகை’, எம்ஜிஆரின் ‘நாளை நமதே’ முதலான ஏராளமான படங்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, முதல் படத்தை எடுத்தார். தோல்வியாகிப் போனது, ஆனால் மனம் தளரவில்லை. அதேசமயத்தில், விஜயகாந்த் இரண்டு மூன்று படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கும் வெற்றிக்கனி அவர் கையில் விழுந்தபாடில்லை.

அந்த சமயத்தில்தான் யதேச்சையாக விஜயகாந்தை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர், தன் இரண்டாவது படத்துக்கு அவரை நாயகனாக்கினார். படம் வெளியானது. பட்டையைக் கிளப்பியது. ‘யாருய்யா டைரக்டர்?’ என்று எல்லோரையும் கேட்க வைத்தது. விஜயகாந்துக்கும் மாபெரும் வெற்றியைத் தந்தது. அது... ‘சட்டம் ஒரு இருட்டறை’. கதை என்னவோ சாதாரண, டெம்ப்ளேட் கதைதான். ஆனால், அதைச் சொன்னவிதத்திலும் நடுநடுவே வைத்த ட்விஸ்ட்டிலும் தனித்துத் தெரிந்தார்.

அதையடுத்து ‘சாட்சி’, ‘நீதிக்கு தண்டனை’, ’நீதியின் மறுபக்கம்’, ‘இது எங்கள் நீதி’ என்று சட்ட நுணுக்கங்களைச் சொல்லும் படங்களாகவே இயக்கினார். படத்தின் பெயரிலேயே ‘நீதி’யை வைத்திருப்பார். ‘சட்டம்’ வைத்திருப்பார். இம்மாதிரியான படங்களால், ஆவரெஜ் வெற்றியையும் பிரமாண்டமான வெற்றியையும் சந்தித்தார். மார்க்கெட் வேல்யூ கொண்ட இயக்குநர் என்று பேரெடுத்த இயக்குநர்களின் பட்டியலில் சந்திரசேகரும் இணைந்தார்.


தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர் பூரண சந்திரராவ் தயாரிப்பில், ரஜினியையும் பாக்யராஜையும் வைத்து ‘நான் சிகப்பு மனிதன்’ இயக்கி, மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார். அதேசமயம், ‘நிலவே மலரே’ மாதிரியான படங்களையும் கொடுத்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என ஏராளமான திரைப்படங்களை எடுத்து, நல்ல கதாசிரியர் என்றும் சிறந்த வசனகர்த்தா என்றும் பிரமாதமான இயக்குநர் என்றும் பேரெடுத்தார்.

அதேபோல, தன் மகனை நடிகனாக அறிமுகப்படுத்தினார். சிறுவயதில் இருந்தே நடிக்கவைத்து, ஒவ்வொரு படமாக தொடர்ந்து பயன்படுத்தி, பின்னர் நாயகனாக களமிறக்கினார். ‘யாருப்பா இந்தப் பையன்’ என்று எல்லோரும் கேட்டார்கள். ‘டைரக்டர் சந்திரசேகரின் பையன்... பேரு விஜய்’ என்று விவரித்தார்கள். இதுவும் சாதனைதான். பின்னாளில், விஜய் இன்றைக்கு வளர்ந்து உச்சம் தொட்டவராக இருக்கிறார். ‘விஜய்யோட அப்பா இவர்தான்’ என்று சொல்லும் அளவுக்கு விஜய்யை பக்கா கமர்ஷியல் பேக்கேஜ் ஹீரோவாக, மாஸ் ஹீரோவாக ஆக்கியிருப்பதும் சாதனைதான்.

எல்லாப் படத்திலும் ஒரு சமூக அக்கறை, மக்களுக்குத் தேவையான, நாட்டுக்குத் தேவையான மெசேஜ்... என்பதை மசாலா தூவி, ஆக்‌ஷன் கலந்து, காமெடியும் சேர்த்து எண்பதுகளில் தொடங்கி கலக்கியெடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர், இன்றைக்கும் படங்களை இயக்கிக் கொண்டுதான் இருக்கிறார். இயங்கிக் கொண்டிருக்கிறார்.

கிட்டத்தட்ட 40 வருடங்களாக, தமிழ்த் திரையுலகில் தனியிடம் பிடித்து மாறாப் பெயரும் புகழுமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இன்று பிறந்தநாள்.

1945ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பிறந்தார் எஸ்.ஏ.சி. இன்றைக்கு இவருக்கு 75வது பிறந்தநாள். வாழ்த்துகள் எஸ்.ஏ.சி. சார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE