1990-களில் தமிழ் சினிமாவில் தடம்பதித்து இன்றுவரை பிரம்மாண்ட இயக்குநர் என்ற அடைமொழியுடன் இந்திய சினிமாவே வியந்து மதிக்கும் இடத்தில் இருப்பவர் இயக்குநர் ஷங்கர். அவருடைய பாசறையில் திரைப்படப் பாடம் பயின்ற தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் அறிவழகனுக்கு இன்று (ஜூலை 2) பிறந்த நாள்.
ஷங்கரின் சீடர்
மேட்டூரில் பிறந்து சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக் கல்லூரியில் முறைப்படி சினிமா கற்றவரான அறிவழகன் ஷங்கரின் படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 2009-ல் வெளியான 'ஈரம்' என்னும் திகில் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
புதுமைகள் படைத்த திகில் த்ரில்லர்
» நாற்காலி சர்ச்சை: நோலனின் செய்தித் தொடர்பாளர் விளக்கம்
» 'லக்ஷ்மி பாம்' படத்துக்காகப் புடவை உடுத்தியது நல்ல அனுபவம்: அக்ஷய் குமார்
அதுவரை வந்த எந்த திகில் படம் மாதிரியும் இல்லாமல் புதிய பாணியில் அமைந்திருந்தது 'ஈரம்'. ஆவி/ பேய் என்னும் நம்பிக்கை சார்ந்த திகில் அம்சத்தையும் ஒரு இளம் பெண்ணின் மரணத்தின் பின்னால் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் த்ரில்லர் அம்சத்தையும் கச்சிதமாகக் கலந்து உயர்தரமான ஒளிப்பதிவு,. எடிட்டிங் ஆகிய தொழில்நுட்ப மேன்மையுடன் கூடிய படமாக இயக்குநர் அறிவழகன் 'ஈரம்' படத்தைக் கொடுத்தார்.
'ஈரம்' என்ற தலைப்புக்கேற்ப இறந்த பெண்ணின் ஆவியை நீரின் மூலம் வெளிப்படுத்துவதும் மழை உட்பட பல்வேறு வகைகளில் படம் முழுவதும் ஏதேனும் ஒரு வகையில் நீர் இருப்பதைப் போல் காட்சிகளை உருவாக்கியதுமாக பல புதுமைகளை தன் முதல் படத்திலேயே நிகழ்த்தி, பெரும் நம்பிக்கையை ஏற்படுத்திய இயக்குநராக அறிமுகமானார் அறிவழகன். வணிக வெற்றியும் விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 'ஈரம்' தமிழ் சினிமாவில் பேய்ப் படங்கள் உருவாக்கப்படும் விதத்திலும் ஒட்டுமொத்த தரத்திலும் பெரும் தாக்கம் செலுத்தியது.
வணிக சீரழிவைத் தோலுரித்த வல்லினம்
அடுத்ததாக 'வல்லினம்' என்ற படத்தின் மூலம் விளையாட்டுத் துறையைச் சீரழிக்கும் வணிக நோக்கத்தையும் ஊழலையும் தோலுரித்தார் அறிவழகன், கைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அருமையான கைப்பந்துப் போட்டி காட்சிகள் நுணுக்கங்களுடன் பதிவாகியிருந்தன. பொதுவாக கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளுக்கு இந்தியா போன்ற நாடுகளில் உரிய கவனம் கிடைக்காததைப் பற்றி பேசும் அனைவரும் கிரிக்கெட் விளையாட்டை வில்லனாகச் சித்தரிப்பார்கள். ஆனால் 'வல்லினம்' படம் அந்தத் தவறைச் செய்யவில்லை.
கிரிக்கெட்டுக்கு அளவுகடந்த கவனம் கிடைப்பதற்கும் மற்ற விளையாட்டுகளுக்கு உரிய மதிப்பு கிடைக்காமல் இருப்பதற்கும் கிரிக்கெட் காரணம் அல்ல. அதன் பின்னால் இயங்கும் வணிக லாப நோக்குதான் என்பதைத் தெளிவாக, பிரச்சார நெடியில்லாமல் சுட்டிக்காட்டியது 'வல்லினம்'. வணிகம் உள்ளே புகுந்துவிட்டால் எல்லா விளையாட்டுகளுக்குமே கிரிக்கெட்டுக்கு நேர்ந்த அவலம் நேரக்கூடிய ஆபத்து இருப்பதையும் விளக்கிய படம். இந்த வகையில் 'வல்லினம்' தமிழ் சினிமாவில் வந்த விளையாட்டு பற்றிய படங்களில் முக்கியமான இடம்பெறுகிறது.
மூன்றாவது படமாக 'ஆறாது சினம்' என்ற படத்தை இயக்கினார் அறிவழகன். மலையாளத்தில் வெற்றிபெற்ற 'மெமரீஸ்' படத்தின் தமிழ் மறு ஆக்கமே இந்தப் படம். மனைவியை இழந்த சோகத்தில் மதுவுக்கு அடிமையாகும் நாயகன் தொடர் கொலைகளைச் செய்யும் மர்மக் கொலையாளியைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே இந்தப் படத்தின் கதை. இந்தப் படம் தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
ராஜேஷ்குமார் கதைக்கு தரமான திரைக்கதை
க்ரைம் நாவல் வித்தகரான ராஜேஷ் குமார் எழுதிய நாவல் ஒன்றின் அடிப்படையில் 'குற்றம் 23' என்ற படத்தை இயக்கினார் அறிவழகன். செயற்கைக் கருத்தரிப்பு முறை எனும் அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தி நடக்கும் ஊழலையும் குற்றத்தையும் அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தமிழ் சினிமாவில் அரிதான மெடிக்கல் - த்ரில்லர் வகையைப் பிரபலப்படுத்தியது.
தரமான உருவாக்கம் தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதை ஆகியவற்றுடன் வணிகரீதியான வெற்றியையும் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுகளையும் குவித்தது. இதில் கதாநாயகனாக நடித்த நடிகர் அருண் விஜய்யின் திரைவாழ்வில் முக்கியமான திருப்புமுனையை நிகழ்த்தியது. நாவலாக வெளிவந்த கதையை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் தரமான வெற்றிப் படமாகக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தது இந்தப் படம்.
அறிவழகன் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே வெவ்வேறு வகையில் ரசிக்கத்தக்கவையாக இருந்துள்ளன. சுவாரஸ்யமான திரைக்கதையும் தரமான உருவாக்கமும் அவருடைய பெரும் பலங்களாக இருக்கின்றன. இவற்றைக் கொண்டு அறிவழகன் இன்னும் பல தரமான திரைப்படங்களைக் கொடுத்து ரசிகர்களை மகிழ்விக்க இந்தப் பிறந்த நாள் அன்று அவரை மனதார வாழ்த்துவோம்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago