சேகர் சுமன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு அரசியல் நாடகம்: சுஷாந்த் குடும்பத்தினர் குற்றச்சாட்டு

By ஐஏஎன்எஸ்

ஜூன் மாதம் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே இரங்கல் தெரிவித்தார்கள். சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சேகர் சுமன் மற்றும் தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுடன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது ஒரு அரசியல் நாடகம் என்று சுஷாந்த் குடும்பத்தினர் விமர்சித்துள்ளனர்.

சமீபத்தில் நடிகர் சேகர் சுமன், சுஷாந்த் குடும்பத்தினரைச் சந்திக்க அவர்களது இல்லத்துக்குச் சென்றிருந்தார், பின்னர் தேஜஸ்வி யாதவ் மற்றும் தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோருடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.

இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று சுஷாந்த் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், சுஷாந்தின் மரணத்தை சேகர் சுமன் தனது அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் பேட்டியளித்துள்ள சுஷாந்த் குடும்பத்தினர் கூறியுள்ளதாவது:

''சுஷாந்த் தற்கொலை விவகாரம் குறித்து மும்பையில் போலீஸார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பாட்னாவில் அமர்ந்துகொண்டு இதுகுறித்துப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது அரசியல் நாடகமே அன்றி வேறில்லை. இவை அனைத்தையும் கையாள எங்கள் குடும்பத்துக்குத் திறன் உள்ளது. போலீஸ் விசாரணையின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். எந்தவித அரசியல் தலையீடுகளும் எங்களுக்குத் தேவையில்லை''.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE