‘கப்பேலா’ மலையாளப் படம் குறித்த பதிவில் தெலுங்கு ரசிகர்கள் வசைமழை: ‘பெல்லி சூப்புலு’ இயக்குநர் சைபர் க்ரைமில் புகார்

ஆனா பென், ஸ்ரீநாத் பாஸி ஆகியோரின் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ‘கப்பேலா’. இப்படத்தை முஹம்மது முஸ்தஃபா இயக்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் கரோனா அச்சுறுத்தலால் சில நாட்களிலேயே திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதியன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘பெல்லி சூப்புலு’ படத்தின் இயக்குநர் தருண் பாஸ்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கப்பேலா’ படத்தைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் ‘இப்படத்தில் ஆக்ரோஷமாக கத்திக் கொண்டே, பின்னணி இசையுடன் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோ இல்லை, விவசாயிகள் பற்றியோ, ராணுவ வீரர்கள் அல்லது இந்தியா பற்றியோ கடைசி பத்து நிமிடத்தில் நீண்ட உரை இல்லை. ஆனாலும், இவையும் திரைப்படங்கள் என்றே அழைக்கப்படுகின்றன’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் சலசலைப்பை ஏற்படுத்திவிட்டது. பலரும் தருண் பாஸ்கரை தகாத வார்த்தைகளால் அர்ச்சிக்கத் தொடங்கினர். இது ஒரு கட்டத்தைத் தாண்டவே பொறுமையிழந்த தருண் பாஸ்கர், இந்த நெட்டிசன்களின் வசைமழை குறித்து ஹைதரபாத் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''கடந்த சில நாட்களாக திரைப்படங்கள் குறித்து நான் வெளியிட்ட ஒரு பதிவு என்னையும் என் குழுவினரையும் கேலி செய்யப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, நாங்கள் ஹைதரபாத் சைபர் க்ரைம் உதவி ஆணையர் ஹரிநாத்தை அணுகினோம். மேலும் அனுதீப் மற்றும் கிருஷ்ண தேஜ் என்ற இரண்டு ட்விட்டர் ஐடிகளையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

அவர்களிடம் இந்த விவகாரம் பற்றியும், கேலி கிண்டல்கள் எப்படி ஒரு தனி நபரைப் பாதிக்கின்றன என்பது குறித்தும் அமைதியாகப் பேசினோம். தனிப்பட்ட தாக்குதல்கள், தகாத வார்த்தைகள் இனியும் தொடர்ந்தால் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு போலீஸில் புகாரளிப்போம் என்று எச்சரித்தோம். முதலில் நேர்மறையாகப் பேசிய அவர்கள் போகப் போக இதை ஒரு மிரட்டல் போன்ற உரையாடலாக மாற்ற முயன்றதால் அந்தத் தொலைபேசி உரையாடலை காவல்துறை அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இத்துடன் புகார் நகலையும் இணைத்துள்ளோம்.

இதைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு மிரட்டலுக்கும், அழைப்புகளுக்கும், தகாத வார்த்தைகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்போம்''.

இவ்வாறு தருண் பாஸ்கர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE