காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா? - சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எஸ்.ஏ.சி. காட்டம்

By செய்திப்பிரிவு

காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா என்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக எஸ்.ஏ.சி. வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் தலைமைக் காவலர் ரேவதி துணிச்சலாக சாட்சி கூறியுள்ளார். அவருக்குப் பலரும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் எஸ்.ஏ.சி. வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"இந்தக் கரோனா ஒரு பயங்கரமான கொடிய வைரஸ் என்கிறார்கள். அதில் மாட்டிக் கொண்டவர்கள் கூட பலர் உயிருடன் திரும்பி வந்துவிடுகிறார்கள். ஆனால், இந்த சாத்தான்குளம் சம்பவத்தைக் கேள்விப்படும் போது, இப்படிப்பட்ட காவல்துறையினரிடம் மாட்டினால் என்னாவது என்று நினைக்கும்போதே ஈரக்குலை நடுங்குகிறது.

இந்தக் கரோனா காலத்தில் எத்தனை காவல்துறையினர் கடவுளின் பிரதிநிதிகளாக வேலை செய்தார்கள். அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட காவல்துறையில் இப்படிப்பட்ட கொடுமையா? இந்தச் சாத்தான்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதுவும் உடனடியாகத் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களைக் காப்பாற்ற நினைக்கிற யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்".

இவ்வாறு இயக்குநர் எஸ்.ஏ.சி. தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE