திரையரங்கு ஊழியர்களுக்கு உதவி: சிரஞ்சீவியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடத் திட்டம்

திரையரங்கு ஊழியர்களுக்கு உதவி செய்து, சிரஞ்சீவியின் பிறந்த நாளைப் பிரம்மாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் சிரஞ்சீவி. தற்போதுள்ள கரோனா ஊரடங்கில் கூட தெலுங்குத் திரையுலகின் தொழிலாளர்களுக்கு உதவ அமைப்பு ஒன்றை உருவாக்கினார். அதற்கு பல்வேறு தொழிலாளர்கள் நிதியுதவி அளிக்க, அதன் மூலம் அனைவருக்கும் உதவிகள் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து படப்பிடிப்புத் திட்டம், தெலங்கானா மற்றும் ஆந்திர முதல்வர்களுடன் சந்திப்பு என அனைத்துமே சிரஞ்சீவியின் தலைமையில்தான் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆகஸ்ட் 22-ம் தேதி சிரஞ்சீவி தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.

அன்றைய தினத்தை ராம் சரணின் ரசிகர்கள் பிரம்மாண்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இருக்கும் ஒட்டுமொத்தத் திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவி செய்யவுள்ளனர்.

இது தொடர்பாக ராஷ்ட்ர ராம்சரண் யுவஷக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நம் சிரஞ்சீவியின் பிறந்த நாள் கொண்டாட்டம், மிகப் பிரம்மாண்டமாகத் திட்டமிடப்பட்டு வருகிறது. பல்வேறு நல உதவித் திட்டங்களும், வித்தியாசமான முன்னெடுப்புகளும் இதில் இடம்பெறவுள்ளன.

எனவே, சிரஞ்சீவியின் பாதச் சுவடுகளைத் தொடர்ந்து, ராஷ்ட்ர ராம் சரண் யுவஷக்தி அமைப்பும், கடந்த 3 மாதங்களாக கோவிட்-19 தொற்றுப் பிரச்சினையால் நிதி நெருக்கடியில் இருக்கும் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த திரையரங்க ஊழியர்களுக்குத் தேவைப்படும் அரிசி, காய்கறிகள், சானிடைசர்கள், நிதி உதவி உள்ளிட்ட விஷயங்களைத் தர உள்ளது."

இவ்வாறு ராஷ்ட்ர ராம்சரண் யுவஷக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE