ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு: ஆலியா பட், ஹ்ரித்திக் ரோஷனுக்கு அழைப்பு

ஆஸ்கர் விருதுகளை வழங்கும் திரைப்படக் கலை மற்றும் அறிவியல் அகாடமி ஒவ்வொரு வருடமும் புதிய உறுப்பினர்களை தங்கள் அகாடமியில் சேர்க்கும் பொருட்டு, சர்வதேச அளவில் கலைத்துறையில் சாதித்த பல்வேறு நபர்களுக்கு அழைப்புகளை அனுப்பும். இந்த வருடம் மொத்தம் 819 கலைஞர்களுக்கு இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

'கல்லி பாய்', 'ராஸி' உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக ஆலியாவும், 'ஜோதா அக்பர்', 'சூப்பர் 30' உள்ளிட்ட படங்களில் நடித்ததற்காக ஹ்ரித்திக் ரோஷனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இம்முறை 'பாரசைட்' திரைப்படத்தில் நடித்த பிரதான நடிகர்கள் மற்றும் ஈவா லாங்கோரியா, ஸாஸி பீட்ஸ், ஜான் டேவிட் வாஷிங்க்டன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவிலிருந்து நடிகர்கள் தேர்வு இயக்குநர் நந்தினி ஷ்ரிகாந்த் ('லைஃப் ஆஃப் பை', 'கல்லி பாய்'), ஆடை வடிவமைப்பாளர் நீதா லுல்லா, ஆவணப்பட இயக்குநர்கள் இஷ்தா ஜெயின் மற்றும் அமித் மாதேஷியா, தயாரிப்பாளர் ப்ரியா சுவாமிநாதன், இசைக் கலைஞர் நைனிதா தேசாய், கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் விஷால் ஆனந்த் ('பாரத்', 'வார்') உள்ளிட்டோருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அடுத்த வருடம் அகாடமி விருதுகள் (ஆஸ்கர்) ஏப்ரல் 25, 2021 அன்று நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE