சல்மான் கானின் 'ட்யூப்லைட்' மிகையான பாராட்டுகளை பெற்ற படம்: பதாய் ஹோ இயக்குநர் கருத்து

By ஐஏஎன்எஸ்

சல்மான் கான் நடிப்பில் வெளியான 'ட்யூப்லைட்' திரைப்படம், அதற்குரியதை விட மிகையாக பாராட்டப்பட்ட திரைப்படம் என்று 'பதாய் ஹோ' திரைப்படத்தின் இயக்குநர் அமித் ஷர்மா கூறியுள்ளார்.

ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'பதாய் ஹோ'. தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்தப் படத்தின் இயக்குநர் அமித் ஷர்மா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், 'பதாய் ஹோ' படத்தைப் பற்றிப் பேசுகையில், "அது ஒரு அழகான திரைக்கதை. அதற்கு நான் நியாயமாக பணியாற்ற வேண்டும் என்பது மட்டும் எனக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

நான் விளம்பரப் படங்கள் துறையிலிருந்து வந்தவன். எனவே நான் எப்போதும் புதிய யோசனைகளைத் தேடிக் கொண்டே இருப்பேன். 'பதாய் ஹோ' திரைக்கதையில் நிறைய புதிய பெரிய யோசனைகள் இருந்ததால், இது சுவாரசியமாக இருக்காது என்று எதைப் பார்த்தும் தோன்றவில்லை" என்று கூறினார்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த, மிகை பாராட்டை (overrated) பெற்ற திரைப்படம், நீங்கள் இன்னும் கூட சிறப்பாக இயக்கியிருப்பீர்கள் என்று நினைத்த படம் எது என்று அமிஷ் ஷர்மாவிடம் கேட்ட போது, "சல்மான் கான் நடிப்பில் வெளியான 'ட்யூப்லைட்' திரைப்படம். நான் இயக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருப்பேன் என நினைக்கிறேன்" என்று பதிலளித்தார்.

'பஜ்ரங்கி பைஜான்', 'ஏக் தா டைகர்' ஆகிய பெரும் வெற்றிகளைத் தொடர்ந்து கபீர் கான் - சல்மான் கான் இணையின் மூன்றாவது திரைப்படம் 'ட்யூப்லைட்'. கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் ரூ.200 கோடியைத் தாண்டி வசூலித்தது. 2015-ல் வெளியான 'லிட்டில் பாய்' என்கிற அமெரிக்க திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE