ரீமிக்ஸ் பாடல்களைக் கேட்க மக்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்: பாடகர் ஹரிஹரன் ஆதங்கம்

ரீமிக்ஸ் பாடல்களை அனைத்து வானொலி சேனல்களிலும் மீண்டும் மீண்டும் ஒலிபரப்பி, மக்களைக் கட்டாயமாகக் கேட்க வைக்கிறார்கள் எனப் பாடகர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

1977-ம் ஆண்டு, 'கமன்' என்ற பாலிவுட் திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானவர் ஹரிஹரன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளில் பல நூறு பாடல்களைப் பாடியுள்ளார்.

இரண்டு முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருதையும் பெற்றவர். இந்தியாவில் பாப் இசைக்கான முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் ஹரிஹரன் பல்வேறு கஜல் ஆல்பங்களையும் இசையமைத்துப் பாடியுள்ளார்.

இன்றைய இசைத் துறையின் நிலை, பாடல்கள் உருவாக்கம் குளித்து சமீபத்தில் ஹரிஹரன் அளித்துள்ள பேட்டி:

"நான் எந்தத் தனி நபரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், நீண்டகாலமாக வியாபார ஆதாயத்துக்காக இங்கு இருக்கும் சூழல் பற்றிப் பேச விரும்புகிறேன். கடந்த சில வருடங்களாகவே, ஒரு பாடல் வெளியானால், அது கேட்பவர்களை உணர்ச்சிரீதியாக எப்படித் தொடுகிறது என்பது முக்கியமில்லாமல் போய்விட்டது. அதற்கு எவ்வளவு ஹிட், க்ளிக் வந்திருக்கிறது என்பதே பிரதானமாகிவிட்டது.

அப்போது எங்களுக்கு, ஒரு பாடல் எவ்வளவு தூரம் நினைவுகூரப்படுகிறது என்பதே முக்கியமாக இருந்தது. இப்போது அந்த நிலை இல்லை. அதனால்தான் இப்போது இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களை எடுத்து அதை புதிய இசைக் கருவிகளின் இசையோடு சேர்த்துத் தருகின்றனர். ஏன் பழைய பாடல்கள்? ஏனென்றால் நினைவுகூரும் அளவுக்கு அவை மதிப்புடையவை.

இசைக் கலைஞர் அல்லாத ஒருவர் இசையை வியாபாரம் செய்ய வருகிறார் என்றால் அதை அவர் எப்படிச் செய்வார்? நாம் எதை விற்கிறோமா அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும். அந்தப் பொருள் எப்படி வாடிக்கையாளரால் பயன்படுத்தப்படுகிறது என்பது தெரிய வேண்டும். 30 வருடங்களாக இசையைக் கற்று, பயின்று வரும் ஒரு இசைக்கலைஞரின் அறிவு, இசையைப் பற்றி எதுவும் தெரியாமல் அதை விளம்பரம் செய்யும் ஒருவரின் அறிவை விட எப்படிக் குறைவாக இருந்துவிடும்?

ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிடுகின்றனர். வானொலியில் அனைத்து சேனல்களிலும் அதை மீண்டும் மீண்டும் ஒலிபரப்புகின்றனர். கண்டிப்பாக, மக்கள் அந்தப் பாடலைக் கேட்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். உடனே 'பாருங்கள், மக்கள் விரும்பிக் கேட்கிறார்கள்' என்பார்கள். புதிய இசை, புதிய திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த விஷயம் குறித்து விரிவான, நுணுக்கமான விவாதம் தேவை என நினைக்கிறேன். இதைத்தாண்டி இதுகுறித்து நான் பேசமாட்டேன்.

எனது பாடல்களை ரீமிக்ஸ் செய்கிறார்கள் என்றால் தயவுசெய்து வேண்டாம். என் பாடல்கள் என் இதயத்துக்கு நெருக்கமானவை. என் அனைத்து ரசிகர்களின் இதயத்துக்கும் நெருக்கமானவை. எனவே, தயவுசெய்து வேண்டாம்".

இவ்வாறு ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE