சின்னத்திரை படப்பிடிப்பு எப்போது?- ஆர்.கே.செல்வமணி விளக்கம்

By செய்திப்பிரிவு

மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு எப்போது தொடங்க வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு ஆர்.கே.செல்வமணி பதில் அளித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் 100 நாட்களைக் கடந்து சின்னத்திரை, வெள்ளித்திரை படப்பிடிப்புகள் எதுவுமே நடைபெறாமல் இருந்தது. நீண்ட பேச்சுவார்த்தைப் பிறகு தமிழக அரசு இறுதிகட்டப் பணிகளுக்கும், சின்னத்திரை படப்பிடிப்புக்கும் அனுமதி கிடைத்தது. அப்போது சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கரோனாவின் தீவிரத்தால், முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது.

தற்போது இது தொடர்பாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"சின்னத்திரை படப்பிடிப்புக்கு எப்போது போகலாம் என்று தயாரிப்பாளர்களும், தொழிலாளர்களும் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகு பழைய தளர்வுகளின்படி நடைமுறைகள் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

நான் இப்போது ஐஎம்டிபி சங்கர் சாரிடம் பேசினேன். அவர் 6-ம் தேதிக்குப் பிறகு புதிதாக எதுவும் அனுமதி வாங்க வேண்டியது இருக்காது. இந்த அனுமதியிலேயே போய்க் கொள்ளலாம் என்றார். முதல்வர், அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து புதிதாக அனுமதி வாங்க வேண்டியிருக்குமா என்று அவரிடம் கேட்டேன்.

ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகு பழைய தளர்வுகளின்படியே இருக்கும் என்று அறிவித்திருப்பதால் தேவைப்படாது என்று பதிலளித்தார். ஒருவேளை தேவைப்பட்டது என்றால் சொல்கிறேன் என்றார். ஆனாலும், 2-3 நாட்கள் காத்திருங்கள், எப்படிப் போகிறது என்று பார்த்துவிட்டு முடிவெடுப்போம் எனச் சொன்னார்.

ஜூலை 6-ம் தேதிக்குப் பிறகு பழைய நடைமுறைகள் என்பதால், 8-ம் தேதியிலிருந்து சின்னத்திரை படப்பிடிப்புக்குத் தயாராகலாம். நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் உறுதிப்படுத்திவிட்டுச் சொல்கிறேன்".

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE