பாலிவுட்டின் நட்சத்திர அந்தஸ்தைக் கேள்வி கேட்கும் வித்யுத் ஜம்வால்

பாலிவுட் இன்னும் பெரிய நட்சத்திரங்களின் கையில் தான் இருக்கிறது என்றும், சம உரிமையை விட நட்சத்திர அந்தஸ்துக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் நடிகர் வித்யுத் ஜம்வால் கூறியுள்ளார்.

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து, பாலிவுட்டில் திறமைகளுக்கு இருக்கும் மரியாதை, வாரிசு அரசியல், நட்சத்திரங்களின் ஆதிக்கம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இது போன்ற பிரச்சினைகளிலிருந்து பாலிவுட் மெல்ல மெல்ல விடைபெறும் என்றும் துறையில் சிலர் கூறி வந்தனர்.

ஆனால் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் சேவை சார்பில் திங்கட்கிழமை மாலை ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. அந்த தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள 7 பாலிவுட் படங்களைப் பற்றிய நிகழ்வு அது. இந்திய ஸ்ட்ரீமிங் சேவையில் இது முதன்முறை என்பதால் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் இந்த நிகழ்வு குளித்து ஹாட்ஸ்டார் விளம்பரம் செய்தது. மேலும் இந்த நிகழ்வில் அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், ஆலியா பட், அபிஷேக் பச்சன், வருண் தவான் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வு குறித்துப் பேசியிருக்கும் நடிகர் வித்யுத் ஜம்வால், "கண்டிப்பாக பெரிய அறிவிப்பு தான். 7 படங்கள் வெளியாகவுள்ளன. ஆனால் அதில் மொத்தம் 5 நட்சத்திரங்களை மட்டுமே பிரதிநிதியாக அழைத்துள்ளனர். 2 திரைப்படங்களைச் சேர்ந்தவர்கள் யாரையும் இந்த நிகழ்வுக்கு அழைக்கவில்லை, அதைப் பற்றிய தகவலும் இல்லை. இன்னும் நாம் செல்ல நீண்ட தூரம் இருக்கிறது. இந்த சங்கிலி தொடர்கிறது" என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

வெளியாகவுள்ள ஏழு படங்களில் வித்யுத் ஜம்வால் நடித்துள்ள 'குதா ஹாஃபிஸ்' திரைப்படமும் ஒன்று. ஆனால் இந்தப் படம் சார்பில் யாரும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியே ஜம்வால் கருத்துப் பதிவிட்டுள்ளார். அவரது கருத்துக்கு ரந்தீப் ஹோண்டா, ஜெனிலியா ஆகிய நடிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE