குற்றவாளியோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம்: பூர்ணா வேண்டுகோள்

குற்றவாளியோடு என்னைத் தொடர்புப்படுத்தி செய்தி வெளியிட வேண்டாம் என்று பூர்ணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்ட ஒருவர் பூர்ணாவுக்கு செல்போனில் அறிமுகமாகியுள்ளார். துபாயில் நகைக்கடை முதலாளி என்று அவர் உரையாடியுள்ளார். பின்னர், அன்வரின் குடும்ப உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடமும் அன்வரின் புகைப்படம் என்று டிக் டாக் பிரபலம் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவருக்குப் பூர்ணாவைத் திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த பூர்ணாவின் குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பூர்ணாவின் கார், வீடு ஆகியவற்றை அவர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பூர்ணாவின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளிக்கவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தவறான செய்திகளை வெளியிட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக பூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"இந்தக் கடினமான சூழலில் எனக்கு ஆதரவளித்த நண்பர்களுக்கும், நலம்விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றி. என்னுடைய விவகாரம் தொடர்பாக சில ஊடகங்களில் வெளியான உண்மைக்கு மாறான தகவல்கள் பற்றி நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த மிரட்டல் கும்பலையும், முக்கியக் குற்றவாளியையும் எனக்குத் தெரியாது. குற்றவாளியோடு என்னைத் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

போலிப் பெயர்கள், போலி முகவரிகள், போலி அடையாளங்கள் மூலம் எங்களிடம் திருமணம் குறித்துப் பேசி எங்களை அவர்கள் ஏமாற்றியதால் எங்கள் குடும்பத்தினர் அவர்கள் மீது புகாரளிக்க முடிவு செய்தனர். நாங்கள் சட்டப்படி நடவடிக்கைக்காக போலீஸில் புகார் கொடுக்க முடிவு செய்ததாலேயே அவர்களின் மிரட்டலுக்கு ஆளானோம். அவர்களின் நோக்கம் என்ன என்று எங்களுக்கு அப்போதும் தெரிந்திருக்கவில்லை, இப்போதும் தெரியவில்லை.

தற்போது, என்னுடைய புகாரை ஏற்று கேரள போலீஸார் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர். எனவே, விசாரணை முடியும் வரை என்னுடைய, என் குடும்பத்தின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிட வேண்டாம் என்று ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நம்முடைய நீதித் துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த வழக்கு முடிந்ததும் ஊடகங்களை நிச்சயமாக சந்திப்பேன். என் வாழ்வின் மிகவும் கடினமான ஒரு கட்டத்தில் எனக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் நின்ற என் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய வழக்கின் மூலம், இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களை எதிர்த்துப் போராடும் என்னுடைய சகோதரிகள் சற்று கவனத்துடன் இருக்கவேண்டும்".

இவ்வாறு பூர்ணா தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE