பிளாக் பேந்தருக்கு மட்டும் தான் கறுப்பினக் கலைஞர்களா? - மார்வலைக் கேள்வி கேட்கும் ஆந்தனி மாக்கீ

மார்வல் சூப்பர்ஹீரோ திரைப்படங்களில் ஃபால்கன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆந்தனி மாக்கீ, மார்வல் திரைப்படங்களில் கறுப்பினத்தவருக்கும் சம வாய்ப்பு இல்லாதது தன்னைப் பல தளங்களில் பாதித்தது என்று கூறியுள்ளார்.

மார்வல் திரையுலக பிரபஞ்சம் என்று சொல்லப்படும் சூப்பர்ஹீரோ பட வரிசையில், மாக்கீ, 2014-ம் ஆண்டு 'கேப்டன் அமெரிக்கா: விண்டர் சோல்ஜர்' படத்தில் ஆரம்பித்து இதுவரை 7 திரைப்படங்களில் ஃபால்கன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் அளித்திருக்கும் பேட்டியொன்றில் ப்ளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கம் பற்றிக் கேட்டபோது, " 'தி ஃபேல்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர்' வெளிவரும்போது நான்தான் அதன் நாயகன். நாயகனாக இருக்கும்போது சில கேள்விகளைக் கேட்கும் சக்தி நமக்குக் கிடைக்கிறது. நான் இதுவரை 7 மார்வல் திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அது ஒவ்வொரு தயாரிப்பாளரும், இயக்குநரும், சண்டைக் கலைஞரும், ஆடை வடிவமைப்பாளரும், உதவியாளரும் என அனைவருமே வெள்ளை இனத்தவர்களாகவே இருந்தது என்னை அதிகம் பாதித்தது.

மார்வல் படங்களில் கறுப்பினத் தயாரிப்பாளர் இருந்துள்ளார். அவர் பெயர் நேட் மூர். அவர் தான் 'ப்ளாக் பேந்தர்' திரைப்படத்தின் தயாரிப்பாளர். 'ப்ளாக் பேந்தர்' என்ற படம் எடுக்கும்போது மட்டும் கறுப்பின இயக்குநர், தயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், சண்டைக் காட்சி இயக்குநர் என அனைவரும் இருந்தனர். அது எல்லாவற்றையும் விட பெரிய இனவெறியாக எனக்குத் தெரிந்தது.

ஏனென்றால் கறுப்பினத்தவர்கள் பற்றிய படத்துக்கு மட்டும்தான் கறுப்பின மக்களை வேலைக்கு எடுப்பீர்கள் என்றால், அப்போது வெள்ளை இன நடிகர்கள் நடிக்கும் படத்தில் பணியாற்றும் அளவுக்கு அவர்களுக்குத் திறமை போதாது என்கிறீர்களா என்றே எனக்குத் தோன்றியது.

மார்வலில் நான் கேட்கப்போகும் முக்கிய விஷயம், யார் அந்த வேலைக்குச் சிறப்பானவரோ அவரை எடுங்கள் என்பதே. இரண்டு சிறந்த பெண்கள், இரண்டு சிறந்த ஆண்கள் என்றாலும் கூட சரிதான். அடுத்த பத்து வருடங்களுக்குக் கூட அவர்களுடன் நான் பணியாற்றத் தயார். ஏனென்றால் அது புதிய தலைமுறைக்கு மேற்கொண்டு வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யும். ஒரு குறிப்பிட்ட சதவீதத்திலாவது இந்த சம உரிமை தரப்பட வேண்டுமென்றால் அதைச் செய்யுங்கள். படத்தின் நாயகர்களாக நம்மால் இது போன்ற விஷயங்களைக் கேட்க முடியும்" என்று மாக்கீ கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE