விஜய்யிடம் பேசுவதுமில்லை; அவரது படங்களைப் பார்ப்பதுமில்லை: நெப்போலியன்

விஜய்யிடம் பேசுவதுமில்லை, அவரது படங்களைப் பார்ப்பதுமில்லை என்று நடிகர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர், எம்எல்ஏ, எம்.பி. என இருந்தவர் நடிகர் நெப்போலியன். மகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு குடும்பத்தினருடன் அமெரிக்காவில் குடியேறிவிட்டார். அங்கு ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

சாம் லோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டேவில்ஸ் நைட்' படத்தில் ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நெப்போலியன். இந்தப் படத்தின் வெளியீட்டுக்குத் திட்டமிட்டபோது கரோனா அச்சுறுத்தல் தொடங்கிவிட்டது. இதனால் முதலில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட்டுள்ளனர். விரைவில் இந்தியாவிலும் ஓடிடி தளங்களில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அமெரிக்காவில் இருந்து கொண்டே ஜூம் செயலி மூலமாக பேட்டிகள் அளித்து வருகிறார். அவ்வாறு அளித்த வீடியோ பேட்டியொன்றில் "’போக்கிரி’ படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தீர்கள். இப்போது அவருடைய வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்" என்று நெப்போலியனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர் கூறியிருப்பதாவது:

"அந்தப் படத்தை நான் பிரபுதேவாவுக்காக ஒப்புக்கொண்டேன். அந்தக் கதாபாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். 'போக்கிரி' படத்தில் விஜய்க்கும் எனக்கும் ஒரு கருத்து வேறுபாடு வந்துவிட்டது. அதிலிருந்து அவரிடம் நான் பேசுவதுமில்லை. அவருடைய படங்கள் எதையுமே நான் பார்ப்பதுமில்லை. ஆகையால், அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி என்பதெல்லாம் தெரியாது.

அந்தப் படத்தில் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். படமும் பெரிய ஹிட். கடினமாக உழைக்கிறார். அதனால்தானே வளர்ந்து வருகிறார்".

இவ்வாறு நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE