'தாவணி போட்ட தீபாவளி' பாடல் உருவானதன் சுவாரசியப் பின்னணி: பாடலாசிரியர் யுகபாரதி பகிர்வு

By செய்திப்பிரிவு

'தாவணி போட்ட தீபாவளி' பாடல் உருவானதன் சுவாரசியப் பின்னணி குறித்து பாடலாசிரியர் யுகபாரதி பகிர்ந்துள்ளார்.

2005-ம் ஆண்டு விக்ரம் கிருஷ்ணா தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் 'சண்டக்கோழி'. விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின், லால், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் வரவேற்புப் பெற்ற இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார் யுவன் சங்கர் ராஜா.

இந்தப் படத்தில் இடம்பெற்ற 'தாவணி போட்ட தீபாவளி' என்ற பாடல் மிகவும் பிரபலம். இதனை எழுதிய பாடலாசிரியர் யுகபாரதி தற்போது இந்தப் பாடல் உருவானதன் சுவாரசிய நிகழ்வை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சின்ன நிகழ்வையும் கவித்துவச் சித்திரமாக்குவதில் லிங்குசாமி சமர்த்தர். அவரே கவிஞர், அதுவும் காரணம். அறிமுகத்தில் தொடங்கி அடுத்தடுத்து அவர் இயக்கிய அத்தனைப் படங்களிலும் என்னை வெவ்வேறு இசையமைப்பாளர்களிடம் அழைத்துப்போனவர் அவர்தான். `சண்டக்கோழி’ படம் மூலமே யுவன்ஷங்கர் ராஜாவுக்கு என்முகம் பரிச்சயமானது. லிங்குசாமிக்கு அது நான்காவது படம்.

முதல் மூன்று படங்களிலும் எனக்கான இருக்கையை அளித்த அவர், நான்காவது படத்திலும் நம்பிக்கையை இழக்கவில்லை. என்னையும் யுவனையும் தனியறையில் இருத்தி பாடலுக்கான சூழலை விவரித்தார். குறிப்பாக, மீரா ஜாஸ்மீனின் குணவிசேஷங்களை அவர் காதலுடன் விவரித்தவிதம் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. தீபாவளிக்கு நண்பனின் வீட்டுக்குச் செல்லும் விஷாலுக்கு மீராவைப் பிடித்துவிடுகிறது.

குறும்பும் எதார்த்தமும் விடலைத்தனமுமாக வளையவரும் மீரா, விஷாலுக்குள் விநோத உணர்வுகளை மீட்டிவிடுகிறாள். இயக்குநர் பாலாஜி சக்திவேல் வீட்டுக்கு லிங்குசாமி போயிருந்தபோது இதே மாதிரி ஒரு பெண்ணைப் பார்த்தாக அவர் சொன்னது மங்கலாக ஞாபகமிருக்கிறது. வாழ்வில் நடந்ததை கூட்டியோ குறைத்தோ சொல்லத் தெரிந்தவனே கலைஞன். படத்தில் பாதிதான் வந்திருக்கிறது. லிங்குசாமியின் ரம்மிய மனோநிலை அதைவிட அதிகம்.

காலையில் அமர்ந்த யுவனும் நானும் மாலைவரை மெட்டு எதுவும் பிடிபடாமல் வெவ்வேறு உரையாடலில் நேரத்தைச் செலவிட்டோம். இயக்குநர் பன்னீர்செல்வமும் உடனிருந்தார். சட்டென்று ரவீந்திரஜெயினின் `சிட்சோர்’ பாடல் நினைவுக்கு வர என்னையுமறியாமல் முணுமுணுத்தேன். சிட்சோர் முக்கியமான படம். அதிலுள்ள 'கொரித் தேரா’ என்கிற ஜேசுதாஸ் பாடல், அடிக்கடி என் உதடுகளுக்கு ஒத்தடமிடும்.

ரவீந்திரஜெயினைப் பற்றி இசை எழுத்தாளர் ஷாஜி ஓர் அற்புதமான கட்டுரையை `இசையின் ஒளியில்’நூலில் எழுதியிருக்கிறார். கொரித் தேராவைக் கிசுகிசுத்த உடனே யுவனுக்கு பொறி தட்டியது. அதே அல்ல. அதன் தன்மையில் ஒன்றை முயற்சிசெய்து தத்தகாரத்தைப் பாடிக் காட்டினார். கதைசொல்லும்போதே தீபாவளி என்னும் வார்த்தையைப் பாடலுக்குள் எங்கேனும் இணைக்கவேண்டுமென எண்ணிக்கொண்டேன். தீபாவளியைக் கொண்டாட நண்பன் வீட்டுக்கு வரும் ஒருவன் என்பதனாலும், படம் தீபாவளி பண்டிகையன்று வெளியாக இருந்ததாலுமே அந்த யோசனை.

தத்தகாரத்திற்கு எழுதி ஓரளவு தேர்ந்திருந்ததால் `தாவணிப்போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு’ என ஆரம்பித்தேன். பக்கத்தில் இருந்த பன்னீர்செல்வம், `அவள் எங்கே வந்தாள். இவன்தானே அவள் வீட்டுக்குப் போயிருக்கிறான்’ என்றார். `அவளைத் தன் வீட்டுக்கு மணமுடித்து அழைத்துப்போவதாகக் கற்பனையை நீட்டித்திருக்கிறேன்’ என்றதும், கொள்ளென்று சிரித்துவிட்டார். யுவனுக்கும் என் சாதுர்ய பதில் உற்சாகமளித்தது.

அடுத்த பத்திருபது நொடிகளில் முழுபாடலையும் மெட்டமைத்து வாசித்துக்காட்டினார். அவர் மெட்டமைத்த வேகத்திற்கேற்ப வார்த்தைகளைத் தேர்ந்து சொன்னதை அவரால் நம்பமுடியவில்லை. `பாவாடை கட்டி நிற்கும் பாவலர் பாட்டுநீ’ என்றதும் தன் பெரிய தந்தை பாவலர் வரதராஜனை முன்னிட்டு சில வார்த்தைகளைப் பரிமாறினார். பாவலரின் இசையும் எழுத்தும் மக்களுக்கானவை. இடதுசாரி மேடைகளில் அவர் எழுப்பிய போர் முழக்கம், கேரள ஆட்சி மாற்றத்தையே சம்பவித்ததாக ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதியிருக்கிறார்.

`அறுத்தவாலு குறும்புத்தேளு / ஆனாலும் நீ ஏஞ்சலு’ என்றபோது `அசத்தல் சார். போக் ட்டியூனுக்கு ஏஞ்சலு என்னும் சொல், வித்யாசமா சவுண்ட் பண்ணுது’ என்றார். அன்று ஷங்கரின் அந்நியன் படம் ரிலீஸ் என்பதால் தாமதமாகவே லிங்குசாமியும் உதவியாளர்களும் கம்போசிங்கில் கலந்தார்கள்.

ஆச்சர்யம் பிடிபடாமல் லிங்குசாமி அப்பாடலின் மெட்டிலும் வரிகளிலும் குதூகலித்தார். `மகாமக கொளமே / என் மனசுக்கேத்த முகமே / நவாப்பழ நெறமே / என்னை நறுக்கிப்போட்ட நகமே’ என்றதைத் திரும்பத் திரும்பப் பாடச்சொல்லி மரியாதை செய்தார்.

அவர் கும்பகோணம் என்பதால் மகாமக குளத்தைப் பாடலில் சேர்த்தவுடன் மகிழ்ச்சியின் உச்சிக்கு ஏறியதை உணரமுடிந்தது. அடுக்குப் பானை முறுக்கு, பச்சைத் தண்ணீர் தீர்த்தம், தேக்குமர ஜன்னல், பாதாதி கேசம் வரை பாசத்துடன் காட்டுதல். தேவலோக மின்னல் எல்லாமே நான் அவ்வப்போது சேகரித்து வைத்திருந்த உவமைகள். உற்சாகமும் உணர்வெழுச்சியும் மிக்க தருணத்தில் கொட்டிக் கவிழ்த்தவை.

அத்துடன், லிங்குசாமிக்கு என் விசுவாசத்தின் மேலுச்சியை நிரூபிக்க எதையாவது தந்துவிடும் ஆவலிருந்தது. படைப்பும் படைப்பாளுனும் சமூகத்திற்குக் காட்டும் விசுவாசமே எழுத்தென்பது என் புரிதல். ஈச்சமரத் தொட்டில் / எலந்தப்பழ தொட்டில் என்பவை வானமாமலை தொகுத்த `தமிழர் நாட்டுப் பாடல்கள்’ தொகுப்பை வாசித்திருந்ததால் வந்தவை.

நல்ல வரிகளை ரசிக்கிறார்கள் எனத் தெரிந்தால் அடுத்தடுத்த வரிகளும் அதுபோலவே அமைந்துவிடுவது இயற்கை. என்னை யாரும் கவனிக்கவில்லையோ எனும் தவிப்பும் துடிப்பும் எனக்கு எப்போதும் உண்டு. குழந்தையை தாய் கவனிக்காதபோது சிணுங்கியும் செருமியும் காட்டுமே அப்படி. இப்பாடல் என் சிணுங்கலின் தடயம்.

பாடல்களைச் சிந்தித்து எழுதக்கூடாதென இளையராஜா அடிக்கடி சொல்லுவார். சிந்தித்தால் அறிவு வேலையை ஆரம்பிக்கும். பாட்டும் இசையும் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை. `அந்த ஷணத்தில் என்னவாக வருகிறதோ அதுதான் அற்புதம்’ என்பார்.

அற்புதங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை. நம்மை நாமே வருத்தி முனைந்தாலும் வரும்போதுதான் வரும். ஆண்டுக்கொரு நாள் தீபாவளி வருகிறது. பலருக்கு அது அற்புதமாகவும் அமைகிறது. நரகாசூரனுகோ அந்நாள் இன்னுயிரை இழந்த நாள். யார் பார்வையில் எது எப்படி என்பதை வைத்துத்தான் பாராட்டும் பவிசும் கிடைக்கின்றன.

`முட்டுது முட்டுது மூச்சுமுட்டுது’ என்று பாட்டில் எழுதியிருக்கிறேன். சிலநேரத்தில் நானுமே எழுத்தில் ஒருசிலரை அந்த எல்லைக்கு உந்தித் தள்ளிவிடுகிறேனோ?. `பொழச்சிப்போறான் ஆம்பள’ என்று விட்டுவிடாமல் என்னைப் பின் தொடரும் தோழர்களை மதிக்கிறேன். தீபாவளியை நான் கொண்டாடுவதில்லை. தமிழனாக பொங்கலே என் புளகாங்கிதம். என் வாழ்வின் இறுதி நொடிவரை லிங்குசாமியைக் கும்பிடுவேன்"

இவ்வாறு பாடலாசிரியர் யுகபாரதி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்