ஆமிர் கான் வீட்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் கரோனா தொற்று இருப்பது தொடர்பாக ஆமிர் கான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே இருக்கிறார்கள். எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. கரோனா விழிப்புணர்வுக்காக அரசாங்கத்தின் விளம்பரங்கள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே பாலிவுட்டில் போனி கபூர் வீட்டில் பணிபுரிபவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது பெரும் செய்தியாக உருவாகவே, இதற்கு விளக்கம் அளித்தார் போனி கபூர். மேலும் 14 நாட்கள் குடும்பத்தினருடன் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தற்போது ஆமிர் கான் வீட்டில் பணிபுரிபவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆமிர் கான் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது

"என்னுடைய ஊழியர்களில் சிலருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மிகவும் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட்டு அவர்களை மருத்துவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொண்டதற்காகவும் ஒட்டுமொத்த சமூகத்தையும் தூய்மைப்படுத்துவதற்காகவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீதியுள்ள எங்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் எங்களுக்குத் தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

இப்போது, என் அம்மாவுக்குப் பரிசோதனை. அவருக்குத் தொற்று இருக்கக் கூடாது என்று தயவுசெய்து பிரார்த்தனை செய்யவும். எங்களுக்கு விரைவாகவும் அக்கறையுடனும் உதவிய மும்பை மாநகராட்சிக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூற விரும்புகிறேன்.

கோகிலாபென் மருத்துவமனைக்கும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. பரிசோதனையின்போது மிகவும் கனிவுடனும், ஈடுபாட்டுடனும் நடந்து கொண்டனர். கடவுள் ஆசீர்வதிக்கட்டும், பாதுகாப்பாய் இருப்போம்".

இவ்வாறு ஆமிர் கான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE