இனிமேல் படப்பிடிப்பு பெரிய சவால்தான்: நாசர்

By செய்திப்பிரிவு

இனிமேல் படப்பிடிப்பு பெரிய சவாலாக இருக்கும் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்பு எதுவுமே நடைபெறவில்லை. திரையுலகப் பிரபலங்களும் வீட்டிலிருந்தபடியே தங்களுடைய சமூக வலைதளம் மூலம் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

சிலர் வீட்டிலிருந்தபடியே நடிக்கும் வகையில் குறும்படக் கதை ஒன்றை உருவாக்கி இயக்கி வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் ஸ்ரீப்ரியா இயக்கத்தில் 'யசோதா' குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஸ்ரீப்ரியா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தக் குறும்படத்தில் நடித்திருப்பது குறித்து நாசர் கூறியிருப்பதாவது:

" 'யசோதா' படத்தில் ஸ்ரீப்ரியாவின் கணவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். வீட்டிலிருந்தபடியே ஸ்ரீப்ரியா தொலைபேசியில் அளித்த ஆலோசனைகளின்படி நடித்தது புதிய அனுபவம்தான். என் மகன் லுப்துதீன் ஒளிப்பதிவு செய்தான். இப்படி ஒவ்வொருவருக்கும் அவருடைய வீட்டில் இருப்பவர்கள்தான் உதவி செய்துள்ளனர். குடும்பத்தினர் வெவ்வேறு இடங்களில் வசித்தாலும் அன்பும் பரிவும் மாறவே மாறாது. அந்த விஷயத்தை ரொம்ப பாசிட்டிவாக இந்தக் குறும்படம் சொல்கிறது.

கரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் 3 மாதங்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. அடுத்து என்ன பண்ணலாம் என்று நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு எப்படி, திரையரங்கம் திறப்பு எல்லாம் இனிமேல் பெரிய சவால்தான். திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப நவம்பர் அல்லது டிசம்பர் ஆகும் என நினைக்கிறேன்.

நடிகர்கள் பலரும் சம்பளத்தைக் குறைத்துள்ளனர். 'கபடதாரி' படத்துக்கு நானும் சம்பளத்தைக் குறைத்திருக்கிறேன். ஆகையால் சம்பளக் குறைப்பு மிகவும் நியாயமானது".

இவ்வாறு நாசர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE