'ரீகல் டாக்கீஸ்': சி.வி.குமாரின் அடுத்த புதிய முயற்சி

By செய்திப்பிரிவு

'ரீகல் டாக்கீஸ்' என்ற பெயரில் புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளார் சி.வி.குமார்

தமிழ்த் திரையுலகில் சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரித்து, அதில் வெற்றி கண்டவர் சி.வி.குமார். அவருடைய திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த 'அட்டகத்தி', 'பீட்சா', 'சூது கவ்வும்', 'தெகிடி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட பல படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இவருடைய படங்களுக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே, தொடர்ச்சியாக சிறுபடங்கள் தயாரிப்பு அதிகமானது என்று சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஓடிடி தளங்களைப் பின்பற்றி இப்போது சி.வி.குமாரும் புதிய திட்டம் ஒன்றை உருவாகியுள்ளார்.

'தியேட்டர் டூ ஹோம்' என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 'ரீகல் டாக்கீஸ்' என்ற பெயரில் புதிய முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளார். வீட்டிலிருந்து வசதியாக தாங்கள் நினைத்த, நினைக்கும் படங்களை, நினைக்கும் நேரத்தில் பார்க்கலாம். படத்தை ஒரு முறை பார்க்க கட்டணம் என்ற விதிமுறைப்படி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேரடித் திரைப்படங்கள், தனித்துவமான படங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்தத் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. ஜூலை மாதத்தில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE