இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்

By வி. ராம்ஜி

அஜித் - ஹெச்.வினோத் கூட்டணியில் வந்த ‘நேர்கொண்ட பார்வை’யில், அஜித்துடன் இருக்கும் பெரியவரை அவ்வளவு சீக்கிரத்தில் கடந்துவிடவும் முடியாது. மறந்துவிடவும் முடியாது. சாதாரணமான நடிகரில்லை அவர். நல்ல வாய்ப்பும் அருமையான கேரக்டரும் கொடுத்தால், வெளுத்துவாங்கிவிடுவார். அவர் பெயர் ரகு. ஆனால் அப்படிச்சொன்னால் தெரியாது.

அவரின் அப்பா அசகாயசூரர். அந்தக் காலத்தில் மிகப்பெரிய நடிகர். சிவாஜி மாதிரியான நடிகர்களே அவர் நின்றால் மிக கவனமாக நடிப்பார்கள். ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை யாரைக் கொண்டு வேண்டுமானாலும் எடுக்கமுடியும். ஆனால் அவருடைய கதாபாத்திரத்தைச் செய்ய அவருக்கு இணையாக எவரும் இல்லை’ என்று இயக்குநர் ஸ்ரீதர் வியந்து சொல்லியிருக்கிறார். அப்பேர்ப்பட்ட நடிகர் ரகுவின் தந்தை... டி.எஸ்.பாலையா. ரகுவாக திரையுலகில் அறிமுகமாகி, இப்போதும் நடித்துக் கொண்டிருப்பவர்... ஜூனியர் பாலையா.

சிவகுமார், கமல் நடித்து ஏ.பி.நாகராஜன் இயக்கிய ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் இருந்து நடிக்கத் தொடங்கினார் ஜூனியர் பாலையா. கே.பாலாஜியின் தயாரிப்பில் சிவாஜி நடிப்பில் உருவான ‘தியாகம்’ படத்தில் சிவாஜியுடன் பல காட்சிகளில் நடித்தார். ’வாழ்வே மாயம்’ படத்தில் கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்தார்.

சின்னச்சின்ன கதாபாத்திரங்கள்தான் என்றாலும் அதில் தன் நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியவருக்கு இயக்குநர் பிரியதர்ஷனின் ‘கோபுர வாசலிலே’ அட்டகாசமாக இன்னொரு கதவைத் திறந்தது. கார்த்திக், ஜனகராஜ், நாசர், சார்லியுடன் இணைந்து நண்பர்களில் ஒருவராக ஜூனியர் பாலையா நடித்து அசத்தினார். ‘தேவதை போலொரு பெண்ணிங்கு வந்தது’ பாடலுக்கும் நட்பு சூழ வந்து மனதில் நின்றார்.

கங்கை அமரன் இயக்கத்தில் எவர்கிரீன் ஹிட்டடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தில், ராமராஜனின் கரகாட்டக் கோஷ்டியில் ஜுனியர் பாலையாவின் நடிப்பு தனித்துத் தெரிந்தது. நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், ‘சுந்தரகாண்டம்’ படத்தில் அட்டகாசமான கேரக்டரைக் கொடுத்தார். எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய கேரக்டர் அது. ‘சண்முகமணி’ ‘சண்முகமணி’ என்று பாக்யராஜை குறும்புடன் இவர் அழைக்கும்போதெல்லாம் தியேட்டர் வெடித்துச் சிரித்தது.

பிறகு பாக்யராஜ் தொடர்ந்து ஜூனியர் பாலையாவைப் பயன்படுத்திக் கொண்டார். ’அம்மா வந்தாச்சு’, ‘ராசுக்குட்டி’, ‘வீட்ல விசேஷங்க’ என்று நல்ல நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. கொடுத்த கதாபாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை வழங்கினார்.


’சாட்டை’ படத்திலும் நல்ல கேரக்டரில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார். இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமே என்று ரசிகர்களே நினைக்கும் அளவுக்கு சில நடிகர்கள் இருப்பார்கள். அப்படித்தான் ஜூனியர் பாலையாவையும் ரசிகர்கள் பார்த்தார்கள்; பார்க்கிறார்கள். ’நேர்கொண்ட பார்வை’யில் இவரைப் பார்த்த ரசிகர்களும் அப்படித்தான் நினைத்திருப்பார்கள்.

பாலையா எனும் மகா கலைஞனின் மகன், எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் முத்திரை பதிக்கும் பன்முகக் கலைஞன் ஜூனியர் பாலையாவுக்கு இன்று (ஜூன் 28ம் தேதி) பிறந்தநாள்.

வாழ்த்துகள் ஜூனியர் பாலையா சார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE