காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன்: இயக்குநர் ஹரி

By செய்திப்பிரிவு

காவல்துறையைப் பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுகிறேன் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

'சாமி', 'சிங்கம்', 'சிங்கம் 2', 'சிங்கம் 3', 'சாமி ஸ்கொயர்' எனக் காவல்துறையை மையமாக வைத்துப் படம் இயக்கிய இயக்குநர் ஹரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்தத் துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது. காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுகிறேன்".

இவ்வாறு இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE