சாத்தான்குளம் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் பாலிவுட் பிரபலங்கள்

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் பிரபலங்கள் பலர் சாத்தான்குளம் சம்பவத்துக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் தந்தை, மகனை அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் அடுத்து தந்தையும் 12 மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வைப் பல அரசியல் கட்சிகளும் கண்டித்து, காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்பிரபலங்களைத் தொடர்ந்து, பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பிரியங்கா சோப்ரா, "நான் கேள்விப்பட்டதை வைத்து அதிர்ச்சியும், வருத்தமும், கோபமும் அடைந்தேன். இந்த குரூரத்துக்கு எந்த மனிதரும் உகந்தவரல்ல. அது என்ன குற்றமாக இருந்தாலும் சரி. இந்தத் தவறைச் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கக் கூடாது.

உண்மைகள் வெளியே வர வேண்டும். அந்த குடும்பம் என்ன மாதிரியான சோகத்தில் இருக்கும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு என் ஆறுதல்கள், இரங்கல்கள். ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸுக்கு நீதி கிடைக்க நாம் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும் இது மனிதத்தன்மையற்ற செயல், குற்றம் செய்த காவல்துறை அதிகாரிகள் வெறும் பணி மாற்றல், இடைநீக்கத்தோடு தப்பிக்கக் கூடாது, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று தாப்ஸி, அனுஷ்கா சர்மா, பரீனீதி சோப்ரா, திஷா படானி, ரகுல் ப்ரீத் சிங், ராஜ்குமார் ராவ், கியாரா அத்வானி, க்ரிதி கர்பாந்தா, கவுர் கான், ஈஷா குப்தா, ஸோயா அக்தர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE