நான்‌ புத்திசாலி மாணவி அல்ல; கடின உழைப்பாளி: திவ்யா சத்யராஜ்

நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால்‌ கடின உழைப்பாளி என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். அக்‌ஷய பாத்ராவின் விளம்பரத் தூதுவராகவும் பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு மருத்துவத் துறையில்‌ நடக்கும்‌ முறைகேடுகளைப் பற்றியும்‌ NEET தேர்வை எதிர்த்தும்‌ திவ்யா சத்யராஜ், பிரதமருக்கு எழுதிய கடிதம்‌ சமூக வலைதளங்களில்‌ வைரலானது.

அரசு மருத்துவமனைக்கு வரும்‌ கர்ப்பிணிப்‌ பெண்களுக்கு உள்ள இரும்புச்சத்துக் குறைபாட்டைப் போக்க வேண்டும்‌ என்று சுகாதார அமைச்சரிடம்‌ கோரிக்கை விடுத்திருந்தார்‌. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக பெரும்‌ இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும்‌ என்று திவ்யா, மத்திய வேளாண் அமைச்சரிடம்‌ கேட்டுக்‌கொண்டார்‌.

திவ்யா சத்யராஜ்‌ ஊட்டச்சத்து துறையில்‌ செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின்‌ சர்வதேச தமிழ்‌ப் பல்கலைக்கழகம்‌ அவருக்கு டாக்டர்‌ பட்டம்‌ வழங்கியுள்ளது. டாக்டர்‌ பட்டம்‌ பெற்றவர்களைக் கவுரவிக்க அமெரிக்காவில்‌ நடைபெறவிருந்த விழா கோவிட்‌-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அமெரிக்க சர்வதேச தமிழ்ப்‌ பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ பட்டம்‌ பெறுவது எனக்கு மிகவும்‌ மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்க சர்வதேச பல்கலைக்கழகத்தின்‌ டாக்டர்‌ செல்வின்‌ குமாருக்கு என்‌ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்‌. நான்‌ புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால்,‌ கடின உழைப்பாளி. அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான்‌ சிறந்தது என்று அப்பா சொல்லியிருக்கிறார்‌.

ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்குத்தான்‌ என்பது நியாயம்‌ கிடையாது. தமிழ்‌நாட்டில்‌ குறைந்த வருமானத்தில்‌ வாழ்பவர்களின்‌ ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில்‌ ஒரு இயக்கம்‌ ஆரம்பிக்க உள்ளேன்‌. வறுமைக்கோட்டுக்குக் கீழ்‌ இருப்பவர்களும்‌ கரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்‌. அதற்கு அவர்களுக்கு நோய்‌ எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும்‌ உணவு தேவை".

இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE