நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல: மாளவிகா மோகனன்

நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல என்று நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. 'பேட்ட' படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த மாளவிகா மோகனன், 'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு நாயகியாக நடித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லையென்றால், இந்தப் படம் வெளியாகி இருக்கும். தற்போது திரையரங்கத் திறப்புக்காக படக்குழு காத்திருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நிறவெறிப் போராட்டம் ஏற்பட்டபோது, இந்தியாவில் இருக்கும் நிறவெறி குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை மாளவிகா மோகனன் வெளியிட்டு இருந்தார்.

தற்போது இந்தப் பதிவு தொடர்பான கேள்விக்கு 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் மாளவிகா மோகனன் கூறியிருப்பதாவது:

"நான் சமத்துவத்தை ஆதரிப்பவள். ஒரு நபரின் தனிப்பட்ட முடிவுகளை வைத்து அவர் குணத்தை நான் தீர்மானிக்க மாட்டேன். ஆனால், உங்களுக்குச் சமத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லையென்றால் கண்டிப்பாக உங்களைப் பற்றி நான் தீர்மானிப்பேன். பாலினம், இனம், வர்க்கம் என அனைத்திலும் சமத்துவம் என்ற நம்பிக்கையில்தான் நான் வளர்க்கப்பட்டேன். அனைவரையும் ஒரே மாதிரி நடத்துவது சகஜமானது. இதற்காக என்னைப் பாராட்ட வேண்டுமென்று நான் எதிர்பார்க்க மாட்டேன். ஏனென்றால் அப்படித்தான் ஒருவர் இருக்க வேண்டும்.

ஆனால், இப்போது பலர் நான் பெண்ணியவாதி என்று நினைக்கிறார்கள். பெண்ணியம் என்றால் ஆண்களை வெறுப்பது என்று நினைக்கிறார்கள். நான் பல அற்புதமான ஆண்களை என் வாழ்வில் சந்தித்துள்ளேன். என் அப்பா, சகோதரர்கள், நண்பர்கள், சக நடிகர்கள், முக்கியமாக நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷைப் போன்ற பலர். ஆண்களுக்கு எதிரானவள் அல்ல நான். ஆனால் கண்டிப்பாக பாலினத்தை வைத்து மட்டும் வகைப்படுத்துவதற்கு எதிரானவள். அது கண்டிப்பாக இருக்கக் கூடாது.

மேலும், நம் எண்ணங்களைப் பேச ஒரு தளம் இருப்பது நல்லதுதான். எனக்கு இது பிடிக்கிறது. ஒரு கட்டத்தில் என்னால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைப்பதை நான் விரும்புகிறேன். நமக்கு சில விஷயங்களை மாற்ற முடிகிற ஆற்றல் இருந்தால் நாம் அதைச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் ஒரு நடிகையாக நான் சொல்லும் கருத்துகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் என்பதும் எனக்குத் தெரியும். சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான தளத்தில், எப்படி அதைச் சொல்கிறோம் என்பதும் முக்கியம்".

இவ்வாறு மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE