ஒரு திரைப்படம் என்றால் இயக்குநருக்கு அடுத்த முக்கியமான இடம் ஒளிப்பதிவாளருக்கே. இயக்குநரை கேப்டன் என்றால் ஒளிப்பதிவாளரை வைஸ் கேப்டன் என்று சொல்ல வேண்டும். இந்தச் சின்ன படிநிலை வேறுபாடு இருந்தாலும், இயக்கம் ஒளிப்பதிவு இரண்டுமே மிக மிக நெருக்கமானவை. ஒரு இயக்குநருக்கு ஒளிப்பதிவு பற்றிய முழு அறிவு இருக்க வேண்டும். ஒளிப்பதிவாளர் இயக்குநரின் தேவையைப் புரிந்துகொண்டு அவருடைய எண்ணங்களுக்கு ஒளிவடிவம் கொடுக்க வேண்டும். இந்த நெருக்கத்தினால் தானோ என்னவோ தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள் சிலர் இயக்குநர்களாகவும் சாதித்திருக்கிறார்கள்.
பாலுமகேந்திரா பரம்பரை
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராகத் திரைவாழ்வைத் தொடங்கி இயக்குநரானபின் தான் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் தானே ஒளிப்பதிவையும் செய்தவர். அவருடைய சமகாலத்தவரான ஒளிப்பதிவாளர் அசோக் குமாரும் பல படங்களை இயக்கியிருக்கிறார். அதற்குப் பின் ஒளிப்பதிவுக்கு வந்து இந்திய அளவில் புகழ்பெற்ற பி.சி.ஸ்ரீராமும் 'குருதிப்புனல்' உள்ளிட்ட சில முக்கியமான படங்களை இயக்கியிருக்கிறார். அதன் பிறகு தங்கர்பச்சான், கே.வி.ஆனந்த் என தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டிலும் பிரம்மிக்கத்தக்க தடங்களைப் படைத்தவர்களின் பட்டியலில் மிக முக்கியமானவர் ஜீவா.
இப்போதும்கூட இயக்குநராகவோ ஒளிப்பதிவாளராகவோ இரண்டுமாகவோ தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்திருப்பார் ஜீவா. ஆனால், காலம் விட்டுவைக்கவில்லை. 2007 ஜூன் 26 அன்று ரஷ்யாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது திடீர் மாரடைப்பு வந்து அப்போது 43 வயதே ஆகியிருந்த ஜீவாவின் உயிரைப் பறித்துக்கொண்டது. இன்றோடு அதற்குள் 13 ஆண்டுகள் ஓடிவிட்டன.
» கரோனாவிலிருந்து மீண்ட சமந்தாவின் தோழி: நடிகர் நாகார்ஜுனா பாராட்டு
» 'பாதாள் லோக்', 'புல்புல்' வெற்றி சரியான பாதையில் செல்கிறோம் என்பதைக் காட்டுகிறது: அனுஷ்கா சர்மா
பி.சி.யின் அன்பு மாணவன்
திருத்துறைப்பூண்டியில் பிறந்தவரான ஜீவா, 1980களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றங்களால் ஈர்க்கப்பட்டு கோடம்பாக்கத்தை நோக்கிப் படையெடுத்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் 1980களின் தொடக்கத்தில் மலையாளத்திலும் மத்தியில் தமிழிலும் அறிமுகமாகி கவனம் ஈர்த்துவந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராகச் சேர்ந்தார் ஜீவா. 1987இல் வெளியாகி தமிழ் சினிமாவை உலக அரங்கில் தலைநிமிர வைத்த 'நாயகன்'. 'அக்னி நட்சத்திரம்','அபூர்வ சகோதரர்கள்', 'மீரா' எனப் பல படங்களில் ஸ்ரீராமிடம் பணியாற்றினார்.
இயக்குநர்கள் விரும்பிய ஒளிப்பதிவாளர்
1991இல் மோகன்லால் நடிப்பில் வெளியான 'அபிமன்யு' என்னும் மலையாளப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார் ஜீவா. இயக்குநர் ஷங்கரின் அறிமுகப் படமான 'ஜென்டில்மேன்' ஜீவா ஒளிப்பதிவு செய்த முதல் தமிழ்ப் படம். அதன் பிறகு 'காதலன்', 'இந்தியன்' என ஷங்கரின் அடுத்தடுத்த பிரம்மாண்ட கனவுகளுக்கு ஒளிவடிவம் கொடுத்தார். மகேஷ் பட்டின் 'ஜென்டில்மேன்' இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிலும் ஒளிப்பதிவாளராகத் தடம் பதித்தார். மணிரத்னம் இயக்கிய 'பாம்பே' படத்துக்கு ஸ்டில் ஃபோட்டோகிராபராகப் பணியாற்றினார் ஜீவா.
'ஆசை','உல்லாசம்', 'வாலி', 'குஷி', 'ஸ்நேகிதியே', 'சண்டக்கோழி', 'ரன்' என 90கள் மற்றும் புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளின் முக்கியமான வெற்றிப்படங்களின் ஒளிப்பதிவாளர் ஜீவா. இன்று முன்னணி நட்சத்திரங்களாகக் கோலோச்சும் அஜித், விஜய், ஜோதிகா, மாதவன், விஷால் ஆகியோரின் தொடக்க காலப் படங்கள் இவை. தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து இந்தி,, மலையாளம், தெலுங்குப் படங்களிலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவந்தார்.
நட்சத்திரங்களை மின்னவைத்த இயக்குநர்
2002-ல் வெளியான '12பி' படத்தின் மூலம் இயக்குநரானார் ஜீவா. ஒரு மனிதன் இரண்டு வெவ்வேறு சூழல்களில் எப்படி வாழ்வான் என்பதைச் சித்தரிக்கும் வித்தியாசமான கதையம்சமும் சவாலான திரைக்கதையும் கொண்ட அந்தப் படம் வணிக வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அழகான காட்சிகள், அற்புதமான பாடல்கள், கண்களைக் கவரும் பாடல்கள் படமாக்கம் எனப் பல வகைகளில் இன்று நினைவுகூரத்தக்க படமாக இருக்கிறது '12பி'. நடிகர் ஷாம் நாயகனாக அறிமுகமான படம். 90களின் கனவுத்தாரகைகளான சிம்ரன், ஜோதிகா இணைந்து நடித்த படம் ஆகிய சிறப்புகளும் இந்தப் படத்துக்கு உண்டு.
இதன் பிறகு லிங்குசாமி இயக்கத்தில் தமிழில் வெற்றிபெற்ற 'ரன்' படத்தை இந்தியில் அபிஷேக் பச்சன் – பூமிகா வைத்து இயக்கினார் ஜீவா. மீண்டும் தமிழில் 'உள்ளம் கேட்குமே' படத்தை இயக்கினார். 2005-ல் வெளியான அந்தப் படத்தில் ஷாம், அசின், ஆர்யா, பூஜா, லைலா என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. அசின், ஆர்யா, பூஜா மூவருக்குமே இதுதான் முதல் படம். ஆனால், இந்தப் படம் நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியாவதற்கு முன்பே இவர்கள் மூவரின் மற்ற படங்கள் வெளியாகிவிட்டன. அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவைக் கலக்கிய இளம் கலைஞர்களைக் கண்டறிந்து அறிமுகப்படுத்திய பெருமை ஜீவாவையே சாரும்.
மறக்க முடியாத கல்லூரிப் படம்
தமிழ் சினிமாவில் நீண்ட காலத்துக்குப் பிறகு கல்லுரிப் பருவக் காதலையும் நட்பையும் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசிய வகையில் 'உள்ளம் கேட்குமே' இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து வெற்றிபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும் அவற்றின் படமாக்கமும் இன்றும் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம்பிடிக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் கல்லூரிப் பருவத்தில் இருந்தவர்கள் இப்போது தம் கல்லூரி வாழ்வை அசைபோடும்போது 'உள்ளம் கேட்குமே' படத்தின் காட்சிகளும் பாடல்களும் சேர்ந்தே நினைவுக்கு வரும்.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு 'உன்னாலே உன்னாலே' என்ற இன்னொரு காதல் படத்தை இயக்கினார் ஜீவா. பிரிந்த காதலின் வலியை மையமாக கொண்ட இந்தப் படமும் வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது. இதற்கு அடுத்து ஜெயம் ரவி –கங்கணா ரணவத்தை வைத்து 'தாம் தூம்' படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் இருந்தபோதுதான் ஜீவாவின் அகால மரணம் நிகழ்ந்தது. அதற்குப் பிறகு ஜீவாவின் மனைவி அனீஸ் படத்தின் எஞ்சிய பணிகளை முடித்தார். படம் 2008-ல் வெளியானது.
நகரங்களின் அழகைப் பதிவுசெய்தவர்
உலக மயமாக்கத்தினால் விளைந்த மாற்றங்கள் தென்படத் தொடங்கிய காலகட்டத்தில் பெரிதும் நகர்ப்புறப் பின்னணியைக் கொண்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜீவா நெரிசல், இரைச்சலுக்குள் ஒளிந்திருக்கும் நகரங்களின் அழகையும் நகரவாழ்வு தரும் புத்துணர்வையும் தன் ஒளிக்கருவியில் கச்சிதமாகப் பதிவு செய்தார். இந்த வகையில் ஒரு ஒளிப்பதிவாளரின் பங்களிப்பு பூடகமானது. அதே நேரம் மிக முக்கியமானது.
ஷங்கர், வசந்த், எஸ்.ஜே.சூர்யா எனப் பல முன்னணி இயக்குநர்களுடன் பல படங்களில் பணியாற்றியி இருப்பதிலிருந்து ஒரு ஒளிப்பதிவுக் கலைஞராக அவருடைய திறமையையும் தொழில் நேர்த்தியையும் புரிந்துகொள்ளலாம். அவர் இயக்கிய படங்களையும் சேர்த்து அதிகபட்சமாக 25 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பார் ஜீவா.
ஒளிப்பதிவு செய்யும் இயக்குநர்
பாலுமகேந்திராவைப் போல் தான் இயக்கிய படங்கள் அனைத்துக்கும் தானே ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார் ஜீவா. இதிலிருந்து ஒளிப்பதிவுக் கலையில் அவருக்கிருந்த தீவிரப் பற்றுதலும் இயக்கமும் ஒளிப்பதிவுக்குமான நெருக்கமான பந்தம் குறித்து அவருடைய ஆழ்ந்த புரிதலும் வெளிப்படுகின்றன. ஒரு இயக்குநராக நான்கு வெவ்வேறு படங்களைக் கொடுத்த ஜீவா இன்னும் பல வகைமைகளைச் சேர்ந்த வண்ணமயமான ஜனரஞ்சகப் படங்களைக் கொடுப்பதற்குள் காலம் முந்திக்கொண்டது. அவர் எடுத்த படங்களுக்காக மட்டுமல்லாமல் உயிருடன் இருந்து எடுத்திருக்க வேண்டிய படங்களுக்காகவும் ரசிகர்களால் என்றும் நினைவுகூரப்படுவார் ஜீவா.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago